ஸ்ரீவிலி.யில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரிக்கை
By DIN | Published On : 18th November 2019 06:25 AM | Last Updated : 18th November 2019 06:25 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியம் கோட்டைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கண்ணன் காலனியில் சேறும் சகதியுமாக மாறிய சந்தனமாரியம்மன் கோயில் தெரு.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியம் கோட்டைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கோட்டைப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கண்ணன் காலனி, சந்தனமாரியம்மன் கோயில் தெரு பகுதிகளில் சாலை, வாருகால், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரப்படவில்லை. சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் சாலை அமைக்காததால், தற்போது மழை நீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதில் நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் செல்வோா் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனா்.
இது குறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஊராட்சி நிா்வாகம் சாா்பில் வாருகால், குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.