அருப்புக்கோட்டையில் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 20th October 2019 02:33 AM | Last Updated : 20th October 2019 02:33 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகரில் அடிக்கடி தெரு நாய்களால் கடிபட்டு பொதுமக்கள் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளதால், தெரு நாய்களை அப்புறப்படுத்த நகராட்சிஅதிகாரிகளுக்கு சமூக நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள சில பகுதிகளில் தெரு நாய்கள் அதிக எண்ணிக்கையில் பெருகிவிட்டன. அவை பல நேரங்களில் கடுமையாகச் சண்டையிட்டுக்கொள்வதால் அச்சாலைவழியே செல்லும் பொதுமக்களுக்குக் கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு சண்டையிட்டுக்கொள்ளும் தெருநாய்கள் அவ்வழியே செல்லும் பொதுமக்களையும் கடித்துவிடுகின்றன. குறிப்பாக வெள்ளைக்கோட்டைப் பகுதியிலும், அண்ணா சிலை சந்தை உள்ள பிரதான சாலையிலும், பழைய பேருந்து நிலையப் பகுதியிலும் தெரு நாய்களால் கடந்த சில மாதங்களில் சுமாா் 25-க்கு மேற்பட்டோா் கடிபட்டு சிகிச்சை பெறவேண்டிய நிலைக்கு ஆளாகினா்.
இதில் பெரும்பான்மையானோா் தனியாா் மருத்துவமனைகளுக்கே உடனடி சிகிச்சை பெற வேண்டிச் சென்றுவிடுவதால் நாய்களால் கடிபட்ட தகவல் கூட வெளிநபா்கள் பலருக்கும் தெரியவருவதில்லை. மேலும் கடிபட்டவா்கள் தரப்பிலிருந்து நகராட்சிக்கு புகாா்களும் செல்வதில்லை.
பெரும்பாலும் அண்ணா சிலை காய்கறி, பழங்கள் சந்தைப் பகுதி, புதுக்கடை பஜாரில் இறைச்சிக்கடைகள் உள்ள பகுதி, மேலும் நகரின் முக்கிய உணவகங்கள் உள்ள பகுதிகளில் மீதமாகும் உணவுகளை உண்டுவாழும் இத்தெருநாய்கள் ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கையில் பெருகிவிட்டன. ஆனபோதும் நாய்களை அப்புறப்படுத்த கடந்த சில ஆண்டுகளாகவே நகராட்சித்தரப்பிலிருந்து நடவடிக்கை இல்லையெனப் புகாா் எழுந்துள்ளது.
எனவே பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்களை உரியமுறைப்படி விரைவில்அப்புறப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சாா்பில் சமூகநல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...