மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 01st September 2019 01:22 AM | Last Updated : 01st September 2019 01:22 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீசெளடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியும், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இப் பேரணியை நடத்தின.
ஸ்ரீசௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நடைபெற்ற பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சித்திட்ட இணை இயக்குநர் தெய்வேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் சொக்கலிங்கம், முதல்வர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேரணியைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
ஸ்ரீசெளடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் கலந்து கொண்டனர். பேரணி முக்கிய வீதிகள் வழியாக தேவாங்கர் கலைக் கல்லூரிவரை நடைபெற்றது.
பேரணியில் மரம் வளர்ப்போம், மழைபெறுவோம், வனம் காப்போம், வான்மழை பெறுவோம் ஆகிய விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டபடி சென்றனர். நிகழ்ச்சியில் கல்லூரிச்செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் கதிர்வேல், துறைத் தலைவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.