விருதுநகரில் இ-சேவை மையங்கள்  முடக்கம்

சர்வர் பிரச்னை காரணமாக விருதுநகரில் அரசு இ- சேவை மையங்கள் முடங்கியதால் பொது மக்கள் சான்றிதழ் பெறமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
Updated on
1 min read

சர்வர் பிரச்னை காரணமாக விருதுநகரில் அரசு இ- சேவை மையங்கள் முடங்கியதால் பொது மக்கள் சான்றிதழ் பெறமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
 தமிழகத்தில், அரசு கேபிள் டி.வி. நிறுவனமான எல்காட் மூலம் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில், ஜாதிச் சான்றிதழ், பட்டா, பட்டதாரிச் சான்று, விதவைச் சான்று, ஆதார் நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் முதலானவற்றை பெற்று வந்தனர்.  மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள், நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட  பகுதிகளில் இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. இம்மையங்களில் பொது மக்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை ரூ.60 கட்டணம் செலுத்தி பெற்று வந்தனர். 
 இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெற பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வர் முடக்கம் காரணமாக இணைய தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்றும் எப்போதாவது சில நேரங்களில் மட்டுமே இணையதளம் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. 
 ஒரு நபருக்கு சான்றிதழ் பெற பதிவு  செய்ய ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், இ- சேவை மையத்திற்கு வரும் ஏராளமான பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் திரும்பி செல்கின்றனர். 
  இ- சேவை மையத்திற்கு யார் முதலில் வருகின்றனரோ, அவர்களில் 10 பேருக்கு டோக்கன் வழங்கி அன்றைய தினம் பதிவு செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல நாள்களாக சான்றிதழ் பெறுவதற்காக இ- சேவை மையத்துக்கு பொதுமக்கள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 சென்னையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கோபுரத்தில் தீப்பிடித்ததால், இ-சேவை மையங்களின் சர்வர்கள் சரியாக இயங்குவதில்லை என கூறப்படுகிறது. 
இதுகுறித்து விருதுநகர் கேபிள் டிவி அலுவலக ஊழியர்கள் தரப்பில் கூறியதாவது:   தமிழகம் முழுவதும் சர்வர் பிரச்னை காரணமாக சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சான்றிதழ்கள் பதிவு செய்ய இரண்டு இணைய தளங்கள் உள்ளன. பல இடங்களில் ஒரே இணையதளத்தையே பயன்படுத்தி வந்தனர். 
 தற்போது, இரண்டு இணைய தளத்தையும் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். சர்வரை சனிக்கிழமை தோறும் "அப்டேட்' செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி விரைவில் முடியம் என நம்புகிறோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com