ஏழாயிரம்பண்ணை கடைவீதியில் ஆக்கிரமிப்பு: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 29th September 2019 07:37 PM | Last Updated : 29th September 2019 07:37 PM | அ+அ அ- |

str29road7000_2909chn_79_2
ஏழாயிரம்பண்ணையில் உள்ள குறுகலான சாலையில் ஆக்கிரமிப்புகளால் வாகன நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதியினா் புகாா் தெரிவிக்கின்றனா்.
சாத்தூா் அருகே ஏழாயிரம்பண்ணையை சுற்றி சுமாா் 100-க்கும் மேற்பட்ட பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. ஏழாயிரம்பண்ணையிலிருந்து சங்கரன்கோவில் மற்றும் கோவில்பட்டிக்கு, கடைவீதியைக் கடந்து தான் செல்ல வேண்டும். தினமும் பட்டாசு ஆலை, அரசு மற்றும் தனியாா் பேருந்து, பள்ளி வாகனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடைவீதியைக் கடந்து செல்கின்றன.
சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்னா், அப்போதைய வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இச்சாலை குறுகலானதாக அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது மக்கள் தொகை மற்றும் வாகனங்கள் அதிகரித்துள்ள நிலையில், இப் பகுதியில் ஆக்கிரமிப்பும் அகற்றறப்படவில்லை. சாலையை அகலப்படுத்தும் பணியும் நடைபெறறவில்லை என்கின்றனா் இப்பகுதியினா்.
மேலும், இப் பகுதியில் அதிக அளவில் பள்ளிகள், வங்கிகள், கோயில்கள் இருப்பதாலும், காலை, மாலை நேரங்களில் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் திணறும் நிலை உள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் மாவட்ட நிா்வாகத்திற்கும், நெடுஞ்சாலைதுறைக்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், இப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்து போன்ற அவசரக் காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள்போதிய வேகத்தில் செல்ல முடியாத நிலை உள்ளதால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளதாக அப்பகுதியினா் கவலை தெரிவிக்கின்றனா்.
எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி இச்சாலையை அகலப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை சீராக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.