திருச்சுழி, அருப்புக்கோட்டையில் பாம்புக்கடிக்கு சிகிச்சை வசதியின்றி ஒரே மாதத்தில் 4 பேர் பலி
By DIN | Published On : 29th September 2019 05:26 AM | Last Updated : 29th September 2019 05:26 AM | அ+அ அ- |

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு உரிய உயர்தர மருத்துவ வசதி இல்லாததால் ஒரு மாதத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
காரியாபட்டி அருகே உள்ள கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்த யுவஸ்ரீ (4), இருஞ்சிறை கிராமத்தை சேர்ந்த குமரவேல் (7), பரளச்சியை சேர்ந்த வசந்தகுமார் (12), சிங்கநாதபுரத்தை சேர்ந்த இளைஞர் நாகராஜ் (26) ஆகியோர் அடுத்தடுத்து பாம்பு கடித்து உயிரிழந்தனர். மேலும், பாம்பு கடித்து இருஞ்சிறையை சேர்ந்த சொக்கராஜ் (36) மதுரை அரசு மருத்துவமனை யிலும், கட்டுனூரை சேர்ந்த ராக்கு (50) சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சுழி, அருப்புக்கோட்டை முதலான அரசு மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு உரிய உயர்தர சிகிச்சை இல்லாததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், கால நேரம் அதிகமாவதால் உயிரிழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை மற்றும் மருந்துகள் கையிருப்பு வைத்திருக்க சுகாதார துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.