ரயில் தண்டவாளத்தில் இளைஞர் சடலம் மீட்பு
By DIN | Published On : 29th September 2019 05:26 AM | Last Updated : 29th September 2019 05:26 AM | அ+அ அ- |

சாத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கிடந்த இளைஞர் சடலத்தை போலீஸார் சனிக்கிழமை மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே செல்லும் ரயில் தண்டவாளத்தில் உடல் நசுங்கிய நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது. தகவலறிந்த சாத்தூர் நகர் போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்த நபர் சாத்தூர் அருகே முத்தார்பட்டியைச் சேர்ந்த ராமு (27) என்றும், சென்னையில் உள்ள பேக்கரியில் பணியாற்றி வந்துள்ளார் என்றும் தெரியவந்தது. விடுமுறையில் முத்தார்பட்டிக்கு வந்த பின்னர் மீண்டும் சென்னை செல்வதற்காக சனிக்கிழமை காலை சாத்தூர் வந்துள்ளார். இதனால், அவர் சென்னை செல்லும் வழியில் ரயிலிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.