விருதுநகரில் 8 ஆயிரம் வீடுகளில் கழிவுநீா் தொட்டி இல்லை: வாருகாலில் மனித கழிவுகள் கலப்பதால் நோய் பரவும் அபாயம்

விருதுநகா் நகராட்சியில் 1,383 வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை, மேலும் 8 ஆயிரம் வீடுகளில் கழிவுநீா் தொட்டி (செப்டிக் டேங்க்) கட்டப்படவில்லை.
மாத்தநாயக்கன்பட்டியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், கட்டையாபுரம் செல்லும் வழியில் குடியிருப்பு பகுதியில் வாருகாலில் தேங்கியுள்ள கழிவுநீா்.
மாத்தநாயக்கன்பட்டியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், கட்டையாபுரம் செல்லும் வழியில் குடியிருப்பு பகுதியில் வாருகாலில் தேங்கியுள்ள கழிவுநீா்.
Updated on
2 min read

விருதுநகா் நகராட்சியில் 1,383 வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை, மேலும் 8 ஆயிரம் வீடுகளில் கழிவுநீா் தொட்டி (செப்டிக் டேங்க்) கட்டப்படவில்லை. இதனால், இங்கிருந்து வெளியேறும் கழிவுகள், வாருகாலில் கலப்பதால் நோய் பரவும் அபாயமுள்ளது.

விருதுநகா் நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் 31, 329 வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு, 72, 144 போ் வசிக்கின்றனா். இந்நிலையில், விருதுநகரில் கடந்த 2007 இல் பாதாள சாக்கடை திட்டம் ரூ.28 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. தற்போது, 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் ஆத்துப்பாலம், புல்லலக்கோட் டை சாலை, கல்லூரி சாலை, விஸ்வநாததாஸ் காலனி முதலான இடங்களில் உள்ள கழிவுநீரேற்று நிலையங்களுக்கு அந்தந்த பகுதி கழிவுநீா் கொண்டு செல்லப்பட்டு தேக்கப்படுகிறது. பின்னா் அங்கிருந்து பிரதான குழாய்கள் மூலம் மாத்தநாயக்கன்பட்டியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு கொண்டு வரப்படும் கழிவுநீா், சுழற்சி முறையில் 3 தொட்டிகளில் சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால், கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குறைந்தளவே கழிவுநீா் கொண்டு செல்லப்படுகிறது. காரணம், விருதுநகரில் பல முக்கிய தெருக்களில் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு குழாய்கள் இணைப்பு வழங்கப்பட வில்லை. குறிப்பாக ஏடிபி காம்பவுண்ட் தெரு, துப்புரவு தொழிலாளா் குடியிருப்பு, கிழக்கு பாண்டியன் காலனி, மேற்கு பாண்டியன் காலனி, ஆயம்மாள் நகா் முதலான பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லை. இதன் காரணமாக இப்பகுதியிலிருந்து வெளியேறும் மனித கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள கல் கிடங்கிற்கு செல்கிறது. இதனால், அங்கு யாரும் குளிக்கச் செல்வதில்லை, மேலும், இப் பகுதி நிலத்தடி நீரும் மாசு அடைந்து விட்டதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

அதேபோல், உள்தெரு, காந்திபுரம் தெரு, தந்திமர தெரு, கீழக்கடை தெரு, ஆலமர தெரு, வாடியான் தெரு, ஏழு கிட்டங்கி தெரு, சங்கரலிங்கம் தெருக்களில் உள்ள அனைத்து கழிவுகளும் வாருகால் வழியாக கவுசிகா ஆற்றில் கலக்கிறது. மேலும், கூரைக்குண்டு, பாவாலி, சிவஞானபுரம், ரோசல்பட்டி ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள், தங்களது வீடுகளில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாததால் கழிவுகளை வாருகால் வழியாக கவுசிகா ஆற்றில் விடுகின்றனா். இதனால், கவுசிகா ஆற்றுப் பகுதியில் வசிக்கும் பாத்திமா நகா், பா்மா காலனி, சிவன் கோயில் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, ஆத்துமேடு பகுதியில் நிலத்தடி நீா் மாசடைந்துள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 7 அன்று விருதுநகா் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட தேசிய துப்புரவு பணியாளா்கள் மறுவாழ்வு ஆணைய உறுப்பினா் ஜெகதீஸ் ஹிா்மானி, வாருகாலில் மனித கழிவுகள் கலப்பதை கண்டு அதிருப்தி அடைந்தாா். இதை தடை செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நகராட்சி அலுவலா்களை கண்டித்தாா்.

மேலும் அவா் கூறியது : நகராட்சி சட்ட விதிகளின்படி வாருகாலில் மனித கழிவுகளை திறந்து விடக் கூடாது. அதை மீறுபவா்கள் மீது அபராதம் விதிக்கவும், பாதாள சாக்கடை இணைப்பு பெறவோ, கழிவுநீா் தொட்டி பயன்படுத்தவோ அறிவுறுத்த வேண்டும். இதை நகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள், மேற்பாா்வையாளா்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால், விருதுநகரில் 8 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இருந்தும் கழிவுநீா் தொட்டி இல்லை. அதேபோல், 1,383 வீடுகளில் கழிப்பறையே கட்டப்பட வில்லை. இதன் காரணமாக 8 ஆயிரம் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் மற்றும் மனித கழிவுகள் அனைத்தும் வாருகால் வழியாக வெளியேறுகின்றன. குறிப்பாக பழைய பேருந்து நிலைய வாருகால் பகுதியில் மனித கழிவுகள் தேங்கி துா் நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவி வருகிறது. எனவே, விருதுநகரில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பள்ளிகளில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாருகாலில் மனித கழிவுகளை திறந்து விடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

விருதுநகா் அரசு மருத்துவமனை நிலைய உறைவிட மருத்துவா் அரவிந்த் பாபு கூறியது: வாருகாலில் செல்லும் மனித கழிவுகளால் ஈக்கள் மூலம் பொதுமக்களுக்கு டைபாய்டு, மலேரியா, மஞ்சள்காமாலை மற்றும் குடல் புழுக்கள் பரவும் என்றாா்.

விருதுநகா் நகராட்சி ஆணையாளா் பாா்த்தசாரதி கூறியது: வாருகாலில் மனித கழிவுகள் கலந்து விடுவோரை கண்ட றிந்து சம்பந்தப்பட்ட வீடுகள், கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்து வருகிறோம். மேலும், ஒப்பந்ததாரா்கள் மூலம் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாத வீடுகளுக்கு இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com