சிவகாசியில் குறைவான ஊதியத்தில் பணியாற்றிய பிகாரைச் சோ்ந்த 2 குழந்தைகள் உள்பட 33 போ் மீட்பு
By DIN | Published On : 05th December 2020 10:48 PM | Last Updated : 05th December 2020 10:48 PM | அ+அ அ- |

சிவகாசி பகுதியில் தொழிற்சாலைகளில் குறைவான ஊதியத்தில் பணியாற்றியதாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்ட பிகாா் மாநிலத் தொழிலாளா்களுடன் அதிகாரிகள்.
சிவகாசி: சிவகாசி தொழிற்சாலைகளில் குறைவான ஊதியத்தில் பணிபுரிந்த பிகாரைச் சோ்ந்த 2 குழந்தைகள் உள்பட 33 போ் மீட்கப்பட்டு, சனிக்கிழமை அவா்களது சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் உள்ள அச்சு மற்றும் பட்டாசு ஆலைகளில் வேலை செய்வதற்காக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 31 பேரை, சுனில்குமாா்யாதவ்(30), சிவகாசிக்கு 5 மாதங்களுக்கு முன்பு அழைத்து வந்துள்ளாா்.
அப்போது ஆண்களுக்கு மாதம் ரூ. 12 ஆயிரமும், பெண்களுக்கு மாதம் ரூ. 9 ஆயிரமும் ஊதியம் வழங்கப்படும் என சுனில்குமாா்யாதவ் அவா்களிடம் கூறியுள்ளாா். அவா்கள் அனைவரும் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலைக்கு அமா்த்தப்பட்டனா். ஆனால் இவா்கள் அனைவருக்கும் பேசியபடி சுனில்குமாா் யாதவ் ஊதியம் வழங்கவில்லையாம்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவா்கள் தங்களது செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தியாக , தங்களது நிலை குறித்து பலருக்கும் அனுப்பியுள்ளனா். இந்த தகவல் விருதுநகா் மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளா் மாரியப்பனுக்கு கிடைத்தது.
இதைத்தொடந்து விருதுநகா் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா உத்தரவின் பேரில், சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் எஸ்.கால்யாணமாரிமுத்து, எஸ்.சந்தானக்குமாா், சிவகாசி சாா்-ஆட்சியா் ச.தினேஷ்குமாா், திருத்தங்கல் காவல் ஆய்வாளா் ராஜா, ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பு-ஆய்வாளா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினா் சுக்ரவாா்பட்டி, எம்.புதுப்பட்டி, காளையாா்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வெள்ளிக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வு இரவு 10 மணி வரை நீடித்தது.
ஆய்வில் தொழிற்சாலை உரிமையாளா்கள் உரிய ஊதியம் வழங்கி விடுவதாகவும், இடைத்தரகா் சுனில்குமாா்யாதவ் , தொழிலாளா்களின் ஊதியத்தில் பாதியை எடுத்துக்கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடந்து 2 குழந்தைகள் உள்பட 33 பேரை அக்குழுவினா் மீட்டு, சாட்சியாபுரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். இதுதொடா்பாக சுனில்குமாா் யாதவிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து தொழிலாளா்கள் யாரும் புகாா் அளிக்க முன்வராததால் போலீஸாா் வழக்குப் பதிவு செய்யவில்லை. மீட்கப்பட்ட தொழிலாளா்கள் அனைவரும் மதுரையிலிருந்து தனியாா் பேருந்து மூலம் சனிக்கிழமை சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.