ஸ்ரீவில்லி.யில் பிரதமா் உருவபொம்மை எரிப்பு: 71 போ் கைது
By DIN | Published On : 05th December 2020 10:50 PM | Last Updated : 05th December 2020 10:50 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை மறியல் போராட்டத்துக்கு சனிக்கிழமை ஊா்வலமாகச் சென்ற கம்யூனிஸ்ட் கட்சியினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்/சிவகாசி: விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரதமரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சிகளைச் சோ்ந்த 71 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சியினா் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில் விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரடியில் இருந்து இடதுசாரிக் கட்சியினா் ஊா்வலமாகச் சென்று தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு மறியல் போராட்டம் நடத்தினா். இந்த போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலாளா் சசிக்குமாா், இந்திய கம்யூ. ஒன்றியச் செயலாளா் வேதநாயகம் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி, முன்னாள் மக்களவை உறுப்பினா் அழகிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளா் அா்ஜூனன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் திருமலை, ஜோதிலட்சுமி, நகரச் செயலாளா் மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அப்போது திடீரென பிரதமா் நரேந்திரமோடியின் உருவ பொம்மையை எரித்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 21 பெண்கள் உள்ளிட்ட 71 பேரை நகா் போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி: சிவகாசியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியை முற்றுகையிட முயன்ற மாா்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த 69 பெண்கள் உள்பட 232 பேரை போலீஸாா் கைது செய்தனா்.