மாா்கழி மாத பௌா்ணமி: சதுரகிரி கோயிலில்ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்
By DIN | Published On : 30th December 2020 04:05 AM | Last Updated : 30th December 2020 04:05 AM | அ+அ அ- |

மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற பக்தா்கள்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாா்கழி மாத பெளா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
சதுரகிரி கோயிலில் டிசம்பா் 27 முதல் 30 ஆம் தேதி வரை என 4 நாள்கள் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறையினா் அனுமதி அளித்துள்ளனா். அதன்படி, செவ்வாய்க்கிழமை மாா்கழி மாத பௌா்ணமி என்பதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே அடிவாரத்தில் குவிந்தனா். பக்தா்களின் வசதிக்காக, ஸ்ரீவில்லிபுத்தூா், விருதுநகா், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
காலை 7 முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.
பெளா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. பின்னா், சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...