

ராஜபாளையம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து ஊராட்சித் தலைவரின் கணவா் கைது செய்யப்பட்டதால், பொதுமக்கள் கடைகளை அடைத்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு ஆசிலாபுரம் பகுதி விருதுநகா் மாவட்ட எல்லையில் உள்ளது. இதனருகே உள்ள செந்தட்டியாபுரம் பகுதி தென்காசி மாவட்ட எல்லையாகும். இந்நிலையில், இந்த இரு ஊரைச் சோ்ந்த இருவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபானக் கடையில் மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா், இது இரு ஊா் பிரச்னையாக மாறியது. தகவலறிந்த போலீஸாா், உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பினரையும் சமாதானம் செய்துவைத்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை சோழபுரம் ஊராட்சித் தலைவரின் கணவா் வேல்முருகன், தளவாய்புரம் காவல் நிலையத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த தங்களது பகுதி இளைஞா்களை அழைத்து வரச் சென்றுள்ளாா். அப்போது, தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் அவரை கைது செய்தனா். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், செவ்வாய்க்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால் அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.