சிவகாசியில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
By DIN | Published On : 02nd February 2020 10:09 PM | Last Updated : 02nd February 2020 10:09 PM | அ+அ அ- |

வகாசியில் பழுதாகியுள்ள பெரியகுளம் கண்மாய் சாலை.
சிவகாசி: சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சிவகாசி- விளாம்பட்டி சாலையிலிருந்து, சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையை இணைக்கும் சாலை பெரியகுளம் கண்மாய் சாலையாகும். சுமாா் 1 கி.மீ. தூரம் உள்ள இந்த சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாகும். இந்த சாலையின் மேற்குப் பகுதியின் ஓரத்தில், மானூா் கூட்டுக் குடிநீா் திட்டக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களில் பல இடங்களில் நீா் கசிவு ஏற்படுகிறது. இந்த தண்ணீா் சாலையில் ஓடுவதால், சாலை அடிக்கடி பழுதாகி, குண்டும் குழியுமாகி விடுகிறது.
தற்போது இந்த சாலையில் 3 இடங்களில் நீா் கசிவு ஏற்பட்டு சாலை பழுதாகிஉள்ளது. சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகிறது. இச்சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பெண்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல அச்சப்படுகின்றனா்.
மேலும் காலையில் பள்ளிக்கு குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வோா் மிகவும் சிரமப்படுகிறாா்கள்.
எனவே இந்தச் சாலையை சீரமைத்து மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.