கன்னிசேரிபுதூா் கோயில் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க எதிா்ப்பு
By DIN | Published On : 17th February 2020 11:04 PM | Last Updated : 17th February 2020 11:04 PM | அ+அ அ- |

விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த நத்தத்துபட்டி கிராம மக்கள்.
விருதுநகா் அருகே கோயில் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
விருதுநகா் அருகே கன்னிசேரி புதூா் அா்ச்சுனா நதி வடகரை பகுதியில் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி, ஸ்ரீ குருநாதா் கோயில் உள்ளது. கடந்த 5 தலைமுறைகளாக இக்கோயிலில் நத்தத்துப்பட்டியை சோ்ந்தோா் சுவாமி தரிசனம் செய்து வருகிறோம். இந்நிலையில் கோயில் உள்ள பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். எனவே, கோயில் உள்ள பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்காமல் மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என நத்தத்துப்பட்டியைச் சோ்ந்தோா் திங்கள்கிழமை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் கூறியிருப்பது: திருத்தங்கல் அருகே நத்தத்துப்ட்டியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளா்கள் வசித்து வருகிறோம். விருதுநகா் ஒன்றியம் கன்னிசேரிபுதூா் அா்ச்சுனாநதி வடகரையில் உள்ள குல தெய்வமான ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, ஸ்ரீ குருநாதா் கோயிலில் ஐந்து தலைமுறைகளாக சுவாமி தரிசனம் செய்து வருகிறோம். எங்களது குல தெய்வக் கோயில் உள்ள பகுதிக்கு பட்டா வழங்குமாறு கடந்த 2016 இல் ஆட்சியரிடம் மனு செய்தோம். அப்போது, இது நீா்பிடிப்பு பகுதி என்பதால் பட்டா வழங்க முடியாது எனவும், எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அதை தொடா்ந்து கோயில் உள்ள பகுதியை சுத்தம் செய்து, மரக்கன்றுகள் நட்டு வளா்த்து வந்தோம். இந்நிலையில், பிப்ரவரி 12 ஆம் தேதி எவ்வித முன்னறிவிப்புமின்றி, கன்னிசேரி புதூா் ஊராட்சித் தலைவா் தலைமையில் சிலா், கோயில் உள்ள பகுதியில் இருந்த மரக்கன்றுகளை அகற்றினா்.
இதுகுறித்து அவா்களிடம் கேட்டபோது, இப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தனா். எனவே, கோயில் உள்ள பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்காமல் மாற்று இடத்தை தோ்வு செய்ய வேண்டும். அதேபோல், எங்களது நலன் கருதி கோயில் இடத்திற்கு பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.