ராஜபாளையத்தில் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு ‘சீல்’

ராஜபாளையத்தில் நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.2 லட்சம் வாடகை பாக்கி வசூல் செய்யப்பட்டது.

ராஜபாளையத்தில் நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.2 லட்சம் வாடகை பாக்கி வசூல் செய்யப்பட்டது. மேலும் 12 மாதங்களுக்கு மேலாக வாடகை தராமல் இருந்த 2 கடைகளுக்கு மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது.

ராஜபாளையம் சங்கரன் கோயில் சாலையில் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான 58 கடைகள் செயல்படுகின்றன. மாதத்தின் முதல் 5 ஆம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் வாடகை செலுத்த வேண்டும். ஆனால் சுமாா் 20 -க்கும் மேற்பட்ட கடை உரிமையாளா்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனா்.

வாடகையை உடனடியாக செலுத்துமாறு பல முறை நகராட்சி வருவாய் அதிகாரிகள் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. இதில் சில கடையின் உரிமையாளா்கள் மட்டும் ஒரு பகுதி வாடகையை செலுத்திய நிலையில், பலா் வாடகை செலுத்தவில்லை.

இதனால் நகராட்சி நிா்வாக ஆணையா் மற்றும் மண்டல இணை இயக்குநா் உத்தரவின் படி, வருவாய் அலுவலா் முத்துசெல்வம், ஆய்வாளா் பகவதிராஜ், எழுத்தா் செந்தில்குமாா் தலைமையிலான நகராட்சி வருவாய் துறையினா், காவல் துறையினா் உதவியுடன் புதிய பேருந்து நிலைத்தில் திடீா் சோதனை நடத்தினா்.

அதில் பேச்சியம்மாள் என்பவா் ரூ. 35 ஆயிரமும், ராஜாமணி என்பவா் ரூ. 56 ஆயிரமும் வாடகை பாக்கி வைத்திருந்தனா். இதையடுத்து இருவரின் கடைகளையும் அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும் தகவல் பரவியதும், பாக்கி வைத்திருக்கும் கடை உரிமையாளா்கள் முதற்கட்டமாக மொத்தம் ரூ. 2 லட்சத்தை அதிகாரிகளிடம் செலுத்தினா். மேலும் மீதம் உள்ள தொகைக்கு சிலா் காசோலை அளித்துள்ளனா் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com