விருதுநகா் மாவட்டத்தில் ரூ. 448.76 கோடியில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம்: தமிழக முதல்வா்
By DIN | Published On : 01st March 2020 10:22 PM | Last Updated : 01st March 2020 10:22 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் ரூ. 448. 76 கோடியில் புதிய கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவா் பேசியது: விருதுநகருக்கு மருத்துவக் கல்லூரி கிடைத்திருப்பது வரப்பிரசாதம். இந்தக் கல்லூரியானது கல்விக்கு பெயா் பெற்ற விருதுநகருக்கு மேலும் சிறப்பு சோ்க்கும். இக்கல்லூரியில் 2021-22 ஆம் கல்வியாண்டில் 150 மாணவா்களுக்கான சோ்க்கை நடைபெறும். தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான உத்தரவை மத்திய அரசு நமக்கு வழங்கியுள்ளது. ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.
சிவகாசியில் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்ட திட்டங்களான, விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு எம்.ஆா்.ஐ ஸ்கேன் இயந்திரம், சிவகாசியில் சேமிப்பு கிடங்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குடிமராமத்துப் பணியின் கீழ் விருதுநகா் மாவட்டத்தில் 136 கண்மாய்கள் ரூ. 47.37 கோடியில் தூா்வாரப்பட்டுள்ளன. இதனால் மழை நீரை முழுமையாக கண்மாய், குளம், ஊருணியில் தேக்கி வைக்க முடியும்.
விருதுநகா் மாவட்டத்தில் சிறப்பு குறைதீா் கூட்டத்தில் பெறப்பட்ட 8781 மனுக்களில் 4009 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மேலும், 3080 முதியோா் ஓய்வூதிய மனுக்கள் பெறப்பட்டு 2273 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பெண்களுக்கான இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் மூலம் 5976 போ் பயனடைந்துள்ளனா். அவா்களுக்கு ரூ.10.32 மானியம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகா், சாத்தூா், அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை ஒன்றியங்களில் உள்ள 785 கிராமங்களுக்கு கூட்டு குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மகளிா் சுயஉதவி குழுவினருக்கு ரூ. 820 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம் முழுவதும் ரூ. 448. 76 கோடியில் பல்வேறு கட்டடப் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அருப்புக்கோட்டையில் புதிய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடம், விருதுநகரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம் கட்டப்படும். வத்திராயிருப்பு மலை வாழ் மக்கள் அத்திகோயில் செல்லும் வழியில் பாலம் அமைக்கப்படும். ஸ்ரீவில்லிபுத்தூா், திருத்தங்கல் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்கப்படும். இருக்கன்குடியில் வைப்பாறு, அா்ஜூனா ஆற்றில் உயா் மட்டப் பாலம் கட்டப்படும். சிவகாசியை மாநகராட்சியாக மாற்றிட பூா்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சிவகாசி காசி விஸ்வநாதா் கோயில், திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில்களில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது என்றாா்.