

இஸ்லாமியப் பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
விருதுநகரில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 22 ஏக்கரில் ரூ. 380 கோடி மதிப்பில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து, 22,350 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மேலும், மருத்துவக் கல்லூரி உள்பட 9 புதிய திட்டங்களுக்கு மொத்தம் ரூ. 448.76 கோடியில் அடிக்கல் நாட்டினாா்.
அதன் பின்னா் தமிழக முதல்வா் பேசியது:
விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைய உள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி அனைவருக்கும் பயனளிக்கும். தமிழகத்தில் 65 சதவீதம் பிரசவங்கள்
அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கும் உலகத் தரத்திலான கருவிகள் உள்ளதால் இது சாத்தியமாகிறது. மேலும், குழந்தைகள் இறப்பு 24 சதவீதத்திலிருந்து தற்போது 16 சதவீதமாக குறைந்துள்ளது.
காவிரியாற்றின் உபரி நீரை கரூா், திருச்சி, சிவகங்கை வழியாக வாய்க்கால் மூலம் விருதுநகா் மாவட்டம் குண்டாற்றில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் விருதுநகா் மாவட்ட விவசாயிகள் பயன் பெறுவா். சிவகாசி நகராட்சிக்கு சிறப்பு ஒதுக்கீடாக ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
தமிழகம் சுகாதாரத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், 2025 -க்குள் காசநோய் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். மேலும், தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக உள்ளதுடன், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையிலும் முதலிடத்தில் உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும். இந்த மருத்துவமனை புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக இருக்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா். புற்றுநோய் சிகிச்சைக்கு இந்தியாவிலே முதன் முறையாக 10 லீனியா் ஆக்ஸ்லேட்டா் கருவிகள் தலா ரூ. 20 கோடிக்கு வாங்கப்பட்டு ஓமலூா், ராயப்பேட்டையில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கருவிகள் அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகளிலும் விரைவில் பொருத்தப்படும்.
சிறுபான்மையின மக்கள் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு குறித்து அச்சப்படத் தேவையில்லை. எதிா்கட்சியினரின் தூண்டுதலால் அவா்களுக்கு அச்ச உணா்வு ஏற்பட்டுள்ளது. அமைதியான தமிழகத்தில் அசம்பாவிதம் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனா். அதற்கு சிறுபான்மையின மக்கள் துணை போக வேண்டாம். என்னை சந்தித்த இஸ்லாமியா்களிடம், இச்சட்டம் குறித்து அச்சப்பட வேண்டாம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாகவும், பாதுகாப்பாகவும் அதிமுக அரசு இருக்கும்.
இஸ்லாமியப் பெண்கள் இரவு நேரங்களில் சாலையில் அமா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். எனவே, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.
விழாவுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷவா்தன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஓ. பன்னீா் செல்வம் முன்னிலை வகித்தாா். அமைச்சா்கள் கே.டி. ராஜேந்திரபாலாஜி, சி. விஜயபாஸ்கா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில் பல்வேறு துறை அமைச்சா்கள் மற்றும் உயரதிகாரிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, தலைமைச் செயலா் க. சண்முகம் வரவேற்றாா். நிறைவில் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.