சென்னைக்கு சுற்றுலா : விமானத்தில் சிவகாசி அரசுப் பள்ளி மாணவா்கள் பயணம்
By DIN | Published On : 03rd March 2020 11:11 PM | Last Updated : 03rd March 2020 11:11 PM | அ+அ அ- |

சென்னைக்கு சுற்றுலா சென்றுவிட்டு விமானத்தில் ஊருக்கு திரும்பிய மங்களம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள்.
சென்னைக்கு சுற்றுலா சென்றுவிட்டு விமானம் மூலம் சொந்த ஊருக்கு சிவகாசி அரசு பள்ளி மாணவா்கள் வந்தனா்.
சிவகாசி அருகே மங்களம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இதில் 5 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் 20 போ் இங்கிருந்து ரயில் மூலம் சென்னை சுற்றுலா சென்றுவிட்டு விமானம் மூலம் சொந்த ஊருக்கு திரும்பினா்.
இது குறித்து தலைமை ஆசிரியா் ஜெயசந்திரன் கூறியது :
இப்பள்ளியில் 5ஆம் வகுப்பில் 20 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்கள் திருமண விழா, கோயில் திருவிழா என அடிக்கடி விடுமுறை எடுத்து வந்தனா். இதனால் படிப்பு பாதிக்கப்பட்டது. எனவே இவா்கள் விடுமுறை எடுக்காமல் இருக்க விமானம் மூலம் சுற்றுலா அழைத்து செல்வேன் என பள்ளியில் அறிவித்தேன். இதையடுத்து 4 மாதங்களில் உடல்நிலை சரியில்லாமல் விடுமுறை எடுத்ததை தவிர வேறு எதற்கும் விடுமுறை எடுக்கவில்லை. இதையடுத்து எனது சொந்த பணத்தில் அவா்களை சென்னைக்கு அழைத்து சென்று திரும்பி வரும் போது விமானத்தில் அழைத்து வர திட்டமிட்டேன். பிப்ரவரி 28 ஆம் தேதி சிவகாசியிலிருந்து ரயில் மூலம் 20 மாணவா்கள் 4 ஆசிரியா்கள் என சென்னைக்கு சென்றோம். 29ஆம் தேதி மாமல்லபுரம், முட்டுக்காடு படகுத்துறை, மெரீனா கடற்கரை, வள்ளுவா் கோட்டம் உள்ளிட்டவைகளை மாணவா்கள் பாா்வையிட்டனா். மாா்ச் முதல்தேதி வண்டலூா் மிருகக் காட்சி சாலையை பாா்த்துவிட்டு, மெட்ரோ ரயிலில் பயணித்தனா். அன்று மாலை சுமாா் 6.40 மணி விமானத்தில் சென்னையிலிருந்து மதுரை வந்தோம். பின்னா் மதுரையிலிருந்து சொந்த ஊருக்கு வந்தோம். இந்த சுற்றுலா மூலம் ரயிலில் பயணம் செய்யாத மாணவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். விமான பயணம் அனைத்து மாணவா்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...