ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இருவர் பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே  விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்தவரை
ராஜபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்து இருவர் பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே  விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்தவரை மீட்க சென்ற மற்றொருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். 

ராஜபாளையம் அருகே  எஸ். ராமலிங்காபுரத்தை அடுத்த சிவகாமியாபுரத்தை சேர்ந்தவர் முருகன்(60)  இவர் அப்பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் அப்பகுதியில் உள்ள அச்சன் குளம் கண்மாய் பாசன பகுதியில், கோபால் என்பவரின் விவசாய கிணற்றோடு சேர்ந்த பம்பு செட்டில் குளிக்க செல்வது வழக்கம். 

சனிக்கிழமை மாலை  குளிக்க சென்ற போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கிணற்றில் இறங்கி குளித்துள்ளார். அப்போது தவறி விழுந்து கிணற்றில் மூழ்கி இறந்ததாக தெரிகிறது. உறவினர்கள் இவரை தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை  காலை கிணற்றின் மேல் இவரது உடைகள் மற்றும் காலணி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இறந்தவரின் சடலத்தை மீட்க, அதே பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி பாண்டியன் என்பவரை உறவினர்கள் நாடி உள்ளனர். உதவியாளர்கள் யாருமின்றி முருகன் சடலத்தை மீட்க சென்ற பாண்டியன் நீருக்குள் மூச்சு திணறி இறந்துள்ளார். இதன் பின்னர் அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். 

காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் பாண்டியன் சடலத்தை மீட்டனர். காவல் துறையினருக்கு தகவல் அளிக்காமல் மீட்க சென்ற பாண்டியன் உயிரிழந்ததால், தக்க நிவாரணம் வழங்கும் வரை பாண்டியன் சடலத்தை எடுக்க  மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேச சென்ற டி.எஸ்.பி நாக சங்கர் உள்ளிட்ட காவல் துறையினரிடம், பாண்டியனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேர பேச்சு வார்த்தைக்கு பின்னர், பாண்டியன் இறப்புக்கு தகுந்த நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் உறவினர்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். பின்னர் பாண்டியனின் சடலம்  உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்  கிணற்றில் இருந்து முருகன் உடல் மீட்கப்பட்டு, அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com