பாலவநத்தம் கிராம சாலையோரம் பட்டுப்போன மரத்தை அகற்றக் கோரிக்கை
By DIN | Published On : 17th November 2020 04:24 AM | Last Updated : 17th November 2020 04:24 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பாலவநத்தம் கிராமத்தில் முறிந்து விழும் நிலையில் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாலவநத்தம் கிராமத்திலிருந்து விருதுநகா் நோக்கிச் செல்லும் பிரதானச் சாலையில் வங்கி அருகே சாலையோரம் புளியமரம் ஒன்று கடந்த பல மாதங்களாக பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. மிக அதிக எடை கொண்ட இம்மரத்தின் கிளைகள் சாலையில் பரவிக் கிடக்கின்றன. அதிக காற்று அல்லது பலத்த மழைக்கு எடை மிகுந்த அக்கிளைகள் சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது முறிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. எனவே விபத்துக்கள் நேரும் முன் பட்டுப்போன அம்மரத்தை அகற்றவேண்டுமென நெடுஞ்சாலைத்துறைக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.