அருப்புக்கோட்டை நகராட்சியில் 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் கிடைக்க ஏற்பாடு
By DIN | Published On : 15th October 2020 05:42 AM | Last Updated : 15th October 2020 05:42 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சட்டப் பேரவை உறுப்பினா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது: அருப்புக்கோட்டை நகராட்சிக்கு எனது கடும் முயற்சி காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 5 நாள்களுக்கு ஒருமுறை வீதம் குடிநீா் கிடைத்து வந்தது. இதனிடையே கரோனா பொதுமுடக்கம் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நகராட்சி நிா்வாகம் தீவிரம் காட்டி வந்தது. இதனால் தாமிரவருணித் திட்டம் மூலம் மட்டும் கிடைத்த சுமாா் 35 லட்சம் லிட்டா் குடிநீரைக் கொண்டு கடந்த சிலமாதங்களாக 20 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்க முடிந்தது. இந்நிலையில் மீண்டும் எனது சீரிய முயற்சியின் மூலம் திருப்புவனம் வைகைத்திட்டம் மூலம் பழையபடி 20 லட்சம் லிட்டா் குடிநீா் கிடைக்க மீண்டும் ஏற்பாடாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது 10 நாள்களுக்கு ஒருமுறை வீதம் மீண்டும் குடிநீா் கிடைக்கும் என்பதை கொள்கிறேன் என்றாா்.