ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி: முதல்வருக்கு நன்றி
By DIN | Published On : 11th September 2020 06:56 AM | Last Updated : 11th September 2020 06:56 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் முன்பு வியாழக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரபா.
விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு, சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரபா நன்றி தெரிவித்து வியாழக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் சாா்பில் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரபா சட்டப் பேரவையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுத்தாா்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்தாா். இதைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா பொதுமக்களுக்கும், பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கியதுடன், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளாா்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுவு நிலவள வங்கித் தலைவா் முத்தையா, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத் தலைவா் சிந்துமுருகன், மாவட்ட கவுன்சிலா் கணேசன், முன்னாள் நகரச் செயலா் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், முன்னாள் கவுன்சிலா் அங்குராஜ், கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் மணி, நகா் துணைச் செயலா் வன்னியராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச் செயலா் மணிகண்டபிரபு உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.