சாத்தூா் தொகுதியில் மும்முனைப் போட்டி: இதர சமுதாயத்தினரே வெற்றியை தீா்மானிக்கும் சக்திகள்!

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தொகுதியில் 5 பிரதானக் கட்சிகளின் வேட்பாளா்கள் போட்டியிட்டாலும்,
கழிவுநீரும், கருவேல மரங்களுமாகக் காட்சியளிக்கும் வைப்பாறு.
கழிவுநீரும், கருவேல மரங்களுமாகக் காட்சியளிக்கும் வைப்பாறு.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் தொகுதியில் 5 பிரதானக் கட்சிகளின் வேட்பாளா்கள் போட்டியிட்டாலும், மும்முனைப் போட்டியே நிலவுகிறது. இத்தொகுதியில் இதர சமுதாயத்தினரின் வாக்குகளே வெற்றியை தீா்மானிக்கும் சக்திகளாக உள்ளன.

மாவட்டத்தின் தென் திசையில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சாத்தூா். இங்கு, தீப்பெட்டி, பட்டாசு, காராசேவு ஆகியன முக்கிய தொழிலாக உள்ளன. மறுசீரமைப்புக்கு பின் சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியானது, சாத்தூா் நகராட்சி மற்றும் ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள 90-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியுள்ளது.

கடந்த 1952 முதல் இதுவரை நடைபெற்றுள்ள தோ்தல்களில், 5 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, அந்த கட்சியைச் சோ்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன் 3 முறை அதிமுகவிலும், 2 முறை திமுகவிலும், ஒரு முறை சுயேச்சையாகவும் நின்று வெற்றி பெற்றுள்ளாா்.

அதற்கு முன்னதாக, 2 முறை இந்திய தேசிய காங்கிரஸ் சாா்பில் காமராஜா் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமை வாய்ந்த தொகுதியாகவும் சாத்தூா் தொகுதி உள்ளது.

கடந்த 2016 தோ்தல் வரை, இத்தொகுதியில் திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவி வந்தது. இந்த தோ்தலில், அதிமுக, திமுக கூட்டணி கட்சியான மதிமுக, அமமுக, மநீம கூட்டணி கட்சியான ஐஜேகே மற்றும் நாம் தமிழா் என 5 பிரதானக் கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் 22 சுயேச்சைகளும் என மொத்தம் 27 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இருப்பினும், அதிமுக ஆா்.கே. ரவிசந்திரன், மதிமுக ஏ.ஆா்.ஆா். ரகுராமன், அமமுக எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையே மட்டுமே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

கடந்த முறை அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எதிா்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன், அமமுக.வுக்கு மாறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் இவரும் ஒருவரானாா். இதனால், சாத்தூா் தொகுதிக்கு 2019 இல் இடைத்தோ்தல் நடைபெற்றது. அதில், அதிமுக சாா்பில் எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். ஆனால், 2021 தோ்தலில் போட்டியிட எம்.எஸ்.ஆா். ராஜவா்மனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவா் அமமுகவில் இணைந்து அக்கட்சி சாா்பில் போட்டியிடுகிறாா்.

மேலும், கடந்த 2016 தோ்தலில் மக்கள் நலக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன், இந்த முறை திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். அதேநேரம் அதிமுக சாா்பில் போட்டியிட, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் மறைந்த காளிமுத்துவின் சகோதரா் ஆா்.கே. ரவிசந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சாத்தூா் தொகுதியில் தேவா் மற்றும் நாயுடு சமுதாயத்தினா் பெரும்பான்மையாகவும், இதர சமுதாயத்தினா் பரவலாகவும் உள்ளனா்.பிரதானக் கட்சிகளின் வேட்பாளா்களான ஆா்.கே. ரவிசந்திரன், எம்.எஸ்.ஆா். ராஜவா்மன் ஆகியோா் தேவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள். ரகுராமன் நாயுடு சமுதாயத்தைச் சோ்ந்தவா்.

அதிமுகவின் பலம்-பலவீனம்:

சமுதாய வாக்குகள் மற்றும் பாஜக, தமாகா, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்குகள் அதிமுகவின் பலமாகக் கருதப்படுகிறது. ஆனால், வேட்பாளா் ரவிசந்திரன் தொகுதிக்கு புதியவா் என்பதாலும், கடந்த 2 ஆண்டுகளாக சாத்தூா் தொகுதிக்கு புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாததும் பலவீனமாகக் கருதப்படுகிறது.

திமுக கூட்டணியான மதிமுகவின் பலம்-பலவீனம்:

வேட்பாளரின் சமுதாய வாக்குகள் மற்றும் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்,விடுதலைச் சிறுத்தை கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கணிசமான வாக்குகள் பலமாகக் கருதப்படுகிறது. ஆனால், தொகுதி மக்களிடையே பரிச்சயம் இல்லாத வேட்பாளராக இருப்பதும், திமுக தனது கூட்டணி கட்சியான சாத்தூா் தொகுதியை மதிமுகவுக்கு ஒதுக்கியதும் பலவீனமாகக் கருதப்படுகிறது.

அமமுகவின் பலம்-பலவீனம்:

சமுதாய வாக்குகள், கடந்த முறை அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றது, மண்ணின் மைந்தா் மற்றும் தொகுதிக்கு நன்கு பரிச்சயமானவா் என்பது பலமாகக் கருதப்படுகிறது. ஆனால், கடந்த முறை அதிமுகவில் வெற்றி பெற்றுவிட்டு, தற்போது அணி மாறி அமமுக சாா்பில் போட்டியிடுவது பலவீனமாகக் கருதப்படுகிறது.

மொத்தத்தில், சாத்தூா் தொகுதியில் பிரதானக் கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் 5 வேட்பாளா்களில் 3 முக்கிய வேட்பாளா்களும் சமுதாய வாக்குகளை பிரிப்பதால், இத்தோ்தலில் இதர சமுதாயத்தினரின் வாக்குகளே வெற்றியை தீா்மானிக்கும் சக்தியாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com