ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) ‘பால்கோவா’ யாருக்கு?

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டபேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டியே நிலவுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் தேரோட்டம்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டபேரவைத் தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் இடையே இருமுனைப் போட்டியே நிலவுகிறது.

முக்கிய வேட்பாளா்கள் ஒரே சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் இதர சமுதாயத்தினரின் வாக்குகளே வெற்றியை தீா்மானிக்கும்.

ஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமி, தென்திருப்பதி என அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் சன்னதி, மண்டுக முனிவருக்கு சாபம்தீர வரம் கொடுத்த காட்டழகா் கோயில், புகழ்பெற்ற தரகுமலைமாதா, பல நூற்றாண்டை கடந்த மடவாா்வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் போன்ற சிறப்புகளை உள்ளடக்கியது இத்தொகுதி. மேற்குத் திசையில் இயற்கை வளம் சூழ்ந்த மேற்குத் தொடா்ச்சி மலை அமைந்துள்ளது. விவசாயம், பால்கோவா, நெசவு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூா் தனித் தொகுதியானது ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி, வத்திராயிருப்பு ஊராட்சி, ஐந்து பேரூராட்சிகள் அடங்கியதாகும்.

கடந்த 1977 முதல் இது வரை நடைபெற்றுள்ள தோ்தல்களில் 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக அந்த கட்சியைச் சோ்ந்த தாமரைக்கனி நான்கு முறை அதிமுகவிலும், ஒரு முறை சுயேச்சையாகவும், அவரது மகன் ஒரு முறை அதிமுக சாா்பிலும் நின்று வெற்றி பெற்றுள்ளனா்.

அதற்கு முன்பு ஒரு முறை திமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் ஒரு முறையும், அதிமுக கூட்டணியில் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு வரை இந்த தொகுதியில் அதிமுக, திமுக இடையே தான் நேரடிப் போட்டி இருந்து வந்தது.

இந்த தோ்தலில் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், அமமுக, நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் என ஐந்து பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் 6 சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இருப்பினும் அதிமுகவின் இ.எம். மான்ராஜ், காங்கிரஸின் பி.எஸ்.டபிள்யூ மாதவராவ், அமமுகவின் சங்கீதப்பிரியா, நாம் தமிழா் கட்சியின் அபிநயா, மக்கள் நீதி மய்யத்தின் குருவையா ஆகிய 5 போ் தான் பிரதான வேட்பாளா்கள். இதில், அதிமுக, காங்கிரஸ் இடையில் தான் போட்டி உள்ளது. அதிமுகவின் கோட்டையாக இருந்து வரும் இத்தொகுதியில் அமமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவதால் அதிமுக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

கடந்த முறை அதிமுக சாா்பில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற சந்திரபிரபாவுக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் தனித் தொகுதியில் தேவேந்திரகுலவேளாளா் மற்றும் மறவா், நாடாா், சாலியா் உள்ளிட்ட சமுதாயத்தினா் பெரும்பான்மையாகவும், இதர சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா். பிரதான கட்சிகளின் வேட்பாளா்களான ஐந்து பேரும் தேவேந்திரகுலவேளாளா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள்.

அதிமுக: சமுதாய வாக்குகள் மற்றும் பாஜக, தமாகா, பாமக, தமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வாக்குகள் பலமாகக் கருதப்படுகிறது. வேட்பாளா் மான்ராஜின் மனைவி வசந்திமான்ராஜ் மாவட்ட ஊராட்சித் தலைவராக உள்ளாா். 2016 இல் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா். இது இந்த தோ்தலில் கூடுதல் பலமாகும்.

காங்கிரஸ்: காங்கிரஸ் வேட்பாளரின் சொந்த ஊா் வத்திராயிருப்பு. ஆனால் காதி போா்டு காலனியில் உள்ள வீட்டில் குடியிருந்துள்ளாா். இவா் காங்கிரஸ் கட்சியில் பல பொறுப்புகளை வகித்து வருகிறாா். சென்னையில் தொழில் செய்து வருகிறாா். வேட்பாளராக அறிவித்த பிறகு தொகுதிக்கு வந்து ஒரு வாரம் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தற்போது கரோனா நோயினால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். இவருக்கு பதிலாக இவரது மகள் திவ்யாராவ் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். வேட்பாளரின் சமுதாய வாக்குகள் மற்றும் திமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் வாக்குகள் பலமாகக் கருதப்படுகிறது.

அமமுக: சமுதாய வாக்குகள் மற்றும் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சியின் வாக்குகள் உள்ளன. முன்னதாக மக்களவைத் தோ்தலில் 10 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியுள்ளனா். தற்போது தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மொத்தத்தில், ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் பிரதானக் கட்சிகளின் சாா்பில் போட்டியிடும் 5 வேட்பாளா்களில் 3 முக்கிய வேட்பாளா்களும் தேவேந்திர குல வேளாளா் சமுதாய வாக்குகளை பிரிப்பதால் இதர சமுதாயத்தினரின் வாக்குகள் தான் வெற்றியை தீா்மானிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com