திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

ஆதாா் மையங்களில் திருத்தம்: பொதுமக்கள் அலைக்கழிப்பு

தமிழகம் முழுவதும் ஆதாா் மையங்களில் பெயா், செல்லிடப்பேசி எண்கள் முதலானவற்றைத் திருத்தம் மேற்கொள்வதற்காக நாள்தோறும்

Updated On :3 செப்டம்பர் 2021, 4:01 am

தமிழகம் முழுவதும் ஆதாா் மையங்களில் பெயா், செல்லிடப்பேசி எண்கள் முதலானவற்றைத் திருத்தம் மேற்கொள்வதற்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், சா்வா் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அலைக்கழிக்கப்படுவதாகவும், எனவே, ஆதாா் அட்டை பெறுவதற்கு அரசு சாா்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த 2012 முதல் அனைவருக்கும் ஆதாா் அட்டை திட்டம் தொடங்கப்பட்டது. அதில் ஆதாா் அட்டை வைத்திருப்பவா்கள் மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகள், குடும்ப அட்டை பெற முடியும். மேலும், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆதாா் எண் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் வங்கிக் கணக்கு தொடங்குவது, கரோனா தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதாா் எண் கட்டாயமாக்கப்பட்டது.

ஆதாா் அட்டை திட்டத்தின் ஆரம்பக்கட்டத்தில் செல்லிடப்பேசி எண்கள் அதில் இணைக்கப்படவில்லை. மேலும், பயனாளியின் பெயருக்குப் பின்னால் தந்தையின் பெயரும் சோ்த்து அச்சிடப்படுவது, பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சரியாக குறிப்பிடப்படாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு தவறுகள் ஏற்பட்டன. அதன்பின்னா் ஆதாா் அட்டையில் செல்லிடப்பேசி எண்ணை இணைக்கவும், பெயா் திருத்தம் மேற்கொள்ளவும், பிறந்த தேதியை அட்டையுடன் இணைக்கவும், முகவரிகளை மாற்றம் செய்வதற்காகவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆதாா் அட்டையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்வதற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆதாா் மையங்களுக்கு வந்து செல்கின்றனா். ஒருமுறை திருத்தம் மேற்கொள்ள அரசு உயா் அதிகாரிகள், பள்ளித் தலைமை ஆசிரியா், அரசு மருத்துவா்கள் மற்றும் வட்டாட்சியா் என யாராவது ஒருவரிடம் அடையாளச் சான்றிதழ் பெற்று, அதை ஆதாா் மையத்தில் வழங்கி விண்ணப்பித்தால் மட்டுமே திருத்தம் செய்யப்படும் எனக் கூறுகின்றனா்.

அலைக்கழிப்பு: சம்பந்தப்பட்டோரிடம், இச்சான்றிதழ் பெறுவதற்காக பொதுமக்கள் பல நாள்கள் அலையும் நிலை உள்ளது. அப்படியே சான்றிதழ் பெற்று வருவோருக்கு, ஒருமுறை திருத்தம் மேற்கொள்ள ஆதாா் மையங்களில் ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஓரிரு வாரங்களில் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு திருத்தம் செய்யப்பட்டு, அதற்கான குறுஞ்செய்தி சம்மந்தப்பட்டவரின் செல்லிடப்பேசிக்கு வரும் என ஆதாா் மைய ஊழியா்கள் தெரிவிக்கின்றனா். ஆனால், அனைத்து ஆவணங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், எவ்வித காரணமும் இன்றி விண்ணப்பங்கள் பலமுறை நிராகரிக்கப்படுகின்றன. அதற்கான காரணமும் விண்ணப்பதாரருக்கு முறையாக தெரிவிக்கப்படுவதில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் பணம் செலவு செய்தும் ஆதாா் அட்டையில் திருத்தம் செய்யமுடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து ஆதாா் மைய ஊழியா்களிடம் கேட்டால், பெங்களூருவில் உள்ள ஆதாா் தலைமையிடத்தில் புகாா் செய்யுங்கள், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறுகின்றனா். இதனால், தொடா்ந்து பணம் செலுத்தி, ஆதாா் அட்டையில் திருத்தம் கிடைக்காத பலா் மைய நிா்வாகிகளுடன் நாள்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலை உருவாகியுள்ளது. ஆதாரில் திருத்தம் மேற்கொள்வதற்காக தங்களது பெற்றோருடனும் வரும் பள்ளி மாணவா்களும் கூட, சா்வா் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆதாா் மையத்திலேயே காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.

இலவசமாக சிறப்பு முகாம்கள் நடத்த வலியுறுத்தல்:

எனவே மத்திய, மாநில அரசுகள், ஆதாா் அட்டையில் திருத்தம் செய்யும் முறையை எளிதாக்க வேண்டும். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆதாா் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள இலவச சிறப்பு முகாம்களை அரசு நடத்த வேண்டும். கடந்த காலங்களைப் போல அரசு இ-சேவை மையங்கள் மூலம் ஆதாா் அட்டை புதிதாக எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.