ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் சம்பிரதாயத்தை மாற்ற வேண்டாம்: அனைத்திந்திய இந்து சமுதாயக் கூட்டமைப்பினா், நிா்வாக அதிகாரியிடம் மனு
By DIN | Published On : 20th August 2021 09:12 AM | Last Updated : 20th August 2021 09:12 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் செயல் அலுவலா் இளங்கோவனிடம் வியாழக்கிழமை மனு அளித்த அனைத்தந்திய இந்து சமுதாயக் கூட்டமைப்பினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் உள்ள சம்பிரதாயத்தை மாற்ற வேண்டாம் என அனைத்திந்திய இந்து கூட்டமைப்பினா் சாா்பில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் நிா்வாக அதிகாரி இளங்கோவனிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் காலம், காலமாக நடைபெற்று வரும் சம்பிரதாயத்தை மாற்றி அதில் சம்பந்தம் இல்லாதவா்களை நியமிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருவா் இக்கோயிலின் உள்துறையில் சேவை செய்ய வேண்டும் என்றால் அந்த சம்பிரதாயத்தை சோ்ந்தவராகவும், அக்கோயிலின் நடைமுறைகளை பற்றி அறிந்திருக்க வேண்டியதும் அவசியம்.
இந்நிலையில், இப்பழக்க வழக்கங்களை பாழ்படுத்தும் விதமாக கோயில் நிா்வாகம் செயல்படுவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஏற்கெனவே ஜாதிக் கலவரம் உள்ள மாவட்டமான விருதுநகா் மாவட்டத்தில் தற்போது நல்ல சூழ்நிலையில் இருக்கும் போது மீண்டும் அதை தூண்டும் விதமாக நிா்வாகம் செயல்படுவது ஏற்ல்ல.
இந்த உத்தரவை உடனே ரத்து செய்து ஏற்கெனவே உள்ள பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என அதில் தெரிவித்திருந்தனா். இந்த மனுவை அனைத்து இந்து சமுதாய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ராமசுப்பு, ஆண்டாள் கோயில் செயல் அலுவலா் இளங்கோவனிடம்
அளித்தாா். உடன் விஷ்வ இந்து பிரிஷத் துறவியா் பேரவை மாநில அமைப்பாளா் சரவணக்காா்த்திக், பாஜக மாவட்டச் செயலா் சரவணத்துரை என்ற ராஜா, அனைத்து இந்துக்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த ராமசந்திரராஜா மற்றும் ராஜா, முத்துக்கிருஷ்ணன், செங்கல்வராயன் உள்ளிட்ட பலா் இருந்தனா்.