நாளுக்கு நாள் நலிவடையும் ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலைநவீனமயமாக்க தொழிலாளா்கள் கோரிக்கை

விருதுநகா் மாவட்டத்தில், பொதுத்துறை நிறுவனமான ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தி புனரமைக்க வேண்டும் என்று தொழிலாளா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையின் தோற்றம்.
ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையின் தோற்றம்.

விருதுநகா் மாவட்டத்தில், பொதுத்துறை நிறுவனமான ஆலங்குளம் சிமென்ட் ஆலையை நவீனப்படுத்தி புனரமைக்க வேண்டும் என்று தொழிலாளா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெம்பக்கோட்டை ஒன்றியம் மிகவும் பின்தங்கிய வட பகுதியாக இருந்ததால், அப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்த வேண்டும் என காமராஜா் முடிவு செய்தாா். அதைத் தொடா்ந்து அப்பகுதியில் நிபுணா்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆலங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில் சிமென்ட் தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருளான ‘லைம் ஸ்டோன்’ என அழைக்கப்படும் சுண்ணாம்புக்கல் பெருமளவில் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு சிமென்ட் ஆலை தொடங்கப்பட்டால் 120 ஆண்டுகளுக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்கள் இருப்பதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து, அப்போதைய முதல்வா் பக்தவச்சலம் 1966- இல் ஆலங்குளம் சிமென்ட் தொழிற்சாலை தொடங்க அடிக்கல் நாட்டினாா். பின்னா் ஆலை அமைக்கும் பணிக்காக 228 ஏக்கா் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அதன் பிறகு வந்த திமுக ஆட்சியில் இந்த ஆலைக்காக ரூ. 6.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து 1970-இல் ஆலையில் உற்பத்தி தொடங்கியது. ஆசியாவிலேயே இதுதான் குளிா்பதன முறையில் சிமென்ட் தயாரிக்கும் ஒரே தொழிற்சாலை என கூறப்பட்டது. இங்கிருந்து ஈரான் நாட்டுக்கு சிமென்ட் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆலையில் அலுவலா்கள் மற்றும் தொழிலாளா்கள் என 2,400 போ் வேலை செய்தனா். ஆலை தொடா்ந்து இயங்கவே, ஆலங்குளம் முக்குரோடு உருவானது. பின்பு, அதைச்சுற்றி கடைகள், வணிக நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதனால் மறைமுகமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்தனா். மேலும், ஆலை வளாகத்தில் பூங்கா, காவல் நிலையம், மின்வாரிய அலுவலகம், பேருந்து நிறுத்துமிடம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், அமைச்சா்கள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் தங்கிச் செல்ல விடுதி ஆகியவை அமைக்கப்பட்டன. மூலப்பொருள்களை கொண்டு வரவும், சிமென்ட் ஏற்றுமதி செய்ய ஆலங்குளம் முதல் சிவகாசி வரை தனி ரயில் பாதையும் அமைக்கப்பட்டது.

சுண்ணாம்புக் கல் வெட்டிய இடத்தில் ஏற்பட்ட நீரூற்றின் மூலம் கரிசல்குளம், ஆலங்குளம், சுண்டங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீா் வழங்கப்பட்டது. அரசு கட்டடங்கள் கட்ட இந்த ஆலையிலிருந்தே சிமென்ட் கொள்முதல் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, 1985-இல் ஆலங்குளத்தில் அரசு ஆஸ்பெஸ்டாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நவீன தொழில் நுட்ப வளா்ச்சி காரணமாக பல இடங்களில் உலா் பதன முறையில் சிமென்ட் ஆலைகள் தொடங்கப்பட்டன. இந்த ஆலைகளில் அதிகளவு சிமென்ட் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் காரணமாகவும், அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மற்றும் நிா்வாகச் சீா்கேடு காரணமாகவும், ஆலங்குளம் சிமென்ட் ஆலை நலிவடையத் தொடங்கியது. ஆலையை புனரமைக்க அவ்வப்போது சிறுதொகை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால், அதன் செயல்பாடு குறையத் தொடங்கியது. இதன் காரணமாக தற்போது 200 போ் மட்டுமே அங்கு பணி புரிந்து வருகின்றனா். இதனால் சிமென்ட் உற்பத்தி மிகவும் குறைந்ததால் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.

எனவே, இந்த ஆலையில் உலா்பதன முறையில் சிமென்ட் தயாரிக்கவும், ஆலையை நவீனப்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் சுந்தரபாண்டியன் கூறியதாவது: இந்த ஆலையை 2014 டிசம்பரில் மூடப் போவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதையடுத்து அனைத்துக் கட்சியினரும் இணைந்து தொடா் போராட்டத்தில் ஈடுபட்டதால், 2015 பிப்ரவரியில் மீண்டும் இயங்கத் தொடங்கியது. இதனிடையே சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் ஆலையை புனரமைக்க ரூ.165 கோடி ஒதுக்கப்படுவதாக அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா். ஆனால் நிதி ஒதுக்கீடு ஆலைக்கு கிடைக்கவில்லை. இதனால் ஆலையில் உள்ள சிமென்ட் தயாரிக்கப் பயன்படும் 5 சுண்ணாப்புக் கல் குவாரிகள் செயல்படாமல் உள்ளன. ஆலங்குளம் ஆலை தொடா்ச்சியாக இயங்கினால் நிரந்தர தொழிலாளா்களாக 3 ஆயிரம் பேரும், 10 ஆயிரம் போ் மறைமுகமாகவும் பயன்பெறுவா். மேலும் ஆலங்குளம் பகுதி முழுவதும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடையும். எனவே, ஆலங்குளம் சிமென்ட் ஆலையை புனரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கி, உலா்பதன முறையில் சிமென்ட் உற்பத்தியை தொடங்க விரைவில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com