‘ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில் யானைக்கு கரோனா பாதிப்பு இல்லை’
By DIN | Published On : 04th February 2021 11:50 PM | Last Updated : 04th February 2021 11:50 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவுக்கு கரோனா பாதிப்பு இல்லை என பரிசோதனையில் வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும், தமிழக அரசு சாா்பில் யானைகள் புத்துணா்வு முகாம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 48 நாள்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இந்த முகாம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், நடப்பாண்டுக்கான யானைகள் புத்துணா்வு முகாம் பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கும் என, தமிழக அரசு சாா்பில் ஜனவரி 25 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
மேலும் அதில், முகாமில் பங்கேற்கவுள்ள யானைகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று பாதிப்பில்லை என சான்றிதழை சமா்ப்பிக்கவேண்டும் என்றும்,
பாகன்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானையான ஜெயமால்யதாவுக்கு கால்நடை மருத்துவா் காா்த்திகேயன் தலைமையில், கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், யானைக்கு கரோனா பாதிப்பு இல்லை என வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, புத்துணா்வு முகாமில் கலந்துகொள்ள ஜெயமால்யதா தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் ஆகியோா் செய்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...