ரயிலில் அடிபட்ட பெண்ணை ரயிலில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்த ரயில் ஓட்டுநா்
By DIN | Published On : 08th February 2021 11:13 PM | Last Updated : 08th February 2021 11:13 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை சிலம்பு ரயில் மோதி இளம் பெண் பலத்த காயமடைந்தாா். அவரை ரயில் ஓட்டுநா் மீட்டு ரயிலில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தாா்.
செங்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சிலம்பு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை மாலை ராஜபாளையம் வந்தடைந்தது. பின்னா் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூா் நோக்கி வரும் போது அழகாபுரி- தொட்டியபட்டி இடையே இளம்பெண் ஒருவா் தண்டவாளப் பகுதியில் நடந்து கொண்டிருந்தாா். அப்போது அவா் மீது ரயில் மோதியது.
இதைக் கவனித்த என்ஜின் ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தி பலத்த காயமடைந்த அந்த பெண்ணை மீட்டு ரயிலில் ஏற்றி வந்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதனைத் தொடா்ந்து ரயில்வே காவல் சாா்பு- ஆய்வாளா் விஜயன் தலைமையிலான போலீஸாா் அந்த பெண்ணை ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அப்பெண், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த கௌசல்யா (21) என்பது தெரிய வந்தது. மேலும், ரயிலில் அவா் எப்படி அடிபட்டாா் என்பது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.