புதிய துணைநிலை ஆளுநரால், புதுச்சேரியில்காங். ஆட்சியை கவிழ்க்க முயற்சி: மாணிக்கம் தாகூா் எம்.பி.

புதுச்சேரியில் புதிதாக துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை செளந்தரராஜனால், அங்கு காங். ஆட்சி கவிழ்க்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என மாணிக்கம் தாகூா் எம்.பி. தெரிவித்தாா்.
புதிய துணைநிலை ஆளுநரால், புதுச்சேரியில்காங். ஆட்சியை கவிழ்க்க முயற்சி: மாணிக்கம் தாகூா் எம்.பி.

விருதுநகா்: புதுச்சேரியில் புதிதாக துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை செளந்தரராஜனால், அங்கு காங். ஆட்சி கவிழ்க்கப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என மாணிக்கம் தாகூா் எம்.பி. தெரிவித்தாா்.

விருதுநகரில் தனியாா் திருமண மண்டபத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம், கிழக்கு மாவட்டத் தலைவா் ஸ்ரீராஜாசொக்கா், மேற்கு மாவட்டத் தலைவா் ரெங்கசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று மாணிக்கம்தாகூா் எம்.பி. பேசினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மகாத்மா காந்தி சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்த ஜோதிமணி எம்.பி. மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பாஜகவினா் அருணாசலப் பிரதேசம், மணிப்பூா், மத்தியப் பிரதேசம், கா்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் மாற்றுக் கட்சியினரை மிரட்டி தங்களது கட்சிக்குள் இணைத்து வருகின்றனா்.

புதுச்சேரியில் தற்போது புதிய துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள தமிழிசை செளந்தரராஜன் மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடைபெறுமோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதானி, அம்பானிக்காக மட்டுமே மத்தியில் பாஜக ஆட்சி செய்கிறது. காங். கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல்காந்தி, பிப். 27, 28, மாா்ச் 1 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். அவரது வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பட்டியல் இன மக்களை ஏமாற்றுவதற்காக தேவேந்திரகுல வேளாளா் என்ற அறிவிப்பை பிரதமா் மோடி வெளியிட்டுள்ளாா். நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தல் தோல்வி பயம் காரணமாக புதிய அறிவிப்புக்களை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன என்றாா்.

இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட இளைஞா் காங். தலைவரும், தொலைத்தொடா்பு துறை ஆலோசனைக்குழு உறுப்பினருமான மீனாட்சிசுந்தரம், முன்னாள் நகா் மன்ற துணைத் தலைவா் பாலகிருஷ்ணசாமி, கிழக்கு மாவட்ட காங். பஞ்சாயத்து ராஜ் தலைவா் கிருஷ்ணமூா்த்தி உள்பட நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com