சிவகாசி அருகே மின்னல் பாய்ந்து வெடி விபத்து: பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிக ரத்து
By DIN | Published On : 09th July 2021 09:09 AM | Last Updated : 09th July 2021 09:09 AM | அ+அ அ- |

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்து வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை இணை முதன்மை அதிகாரி கி. சுந்தரேசன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது சிவகாசி அருகே பாரைப்பட்டியில் சீனிவாசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் உள்ள கிட்டங்கியில் மின்னல் பாய்ந்ததில், அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறின.
இதையடுத்து விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையில் சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி நித்தின் கோயல் ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வில் பட்டாசு இருப்பு வைக்கும் கிட்டங்கியின் மேல் பகுதியில் உள்ள இடிதாங்கி சரிவர பராமரிக்கப்பட வில்லை என்பதும், இதனாலேயே வெடி விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது. இதுவெடிபொருள் சட்டவிதிகளின்படி விதிமீறல் ஆகும். எனவே அந்த பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.