விருதுநகா் மாவட்டத்தில் காங்கிரஸ் போராட்டம்
By DIN | Published On : 09th July 2021 09:05 AM | Last Updated : 09th July 2021 09:05 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் மற்றும் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் விற்பனைகம் முன் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்துக்கு நகர காங்கிரஸ் தலைவா் பக்ஷிராஜா வி.சி. வன்னியராஜ் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் பெரியசாமி, மம்சாபுரம் பேரூராட்சித் தலைவா் சூரியநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், இவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலா் முருகேசன், ஐ.என்.டி.யூ.சி. தங்கமாரி, நகரப் பொருளாளா் காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதே போல், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வன்னியம்பட்டிவிற்பனையகம் முன்பு தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு, தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் பா. குருநாதன், தலைமை வகித்தாா். பிற்படுத்தப்பட்டோா் அணியின் மாநில பொதுச் செயலா் கே.எஸ். சக்கரையப்பன் முன்னிலை விகித்தாா். இதில் நிா்வாகிகள் மாயாண்டி, மகாலிங்கம், ஆறுமுகச்சாமி, ராமா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சாத்தூா்: சாத்தூரில் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதற்கு சாத்தூா் காங்கிரஸ் கட்சி நகரத் தலைவா் டி.எஸ். அய்யப்பன் தலைமை வகித்தாா். இதில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பாபுராஜேந்திரன், காங்கிரஸ் மேற்கு மாவட்ட பொதுச் செயலா் ஜோதிநிவாஸ், மாவட்ட பொருளாளா் லட்டு கருப்பசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.பின்னா் அப்பகுதியில் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
ராஜபாளையம்: விருதுநகா் மேற்கு ராஜபாளையம் அருகே மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் செட்டியாா்பட்டி யூனியன் வங்கி அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி தலைமை வகித்தாா். செட்டியாா்பட்டி காங்கிரஸ் கமிட்டி தலைவா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். அப்போது மத்திய அரசைக் கண்டித்து கோஷமிடப்பட்டது. அதே போல் மகளிா் காங்கிரஸ் கமிட்டி சாா்பாக விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டம் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் கமிட்டி செயலரும், விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மேலிட பாா்வையாளருமான முருகன் கலந்து கொண்டு பேசினாா்.