திருச்சுழி அருகே ஜல்லிக்கற்களை நிரப்பி கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி: பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 11th July 2021 10:10 PM | Last Updated : 11th July 2021 10:10 PM | அ+அ அ- |

ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்ட நிலையில் பலமாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை.
திருச்சுழியிலிருந்து ராஜகோபாலபுரம் செல்லும் கிராமத்திற்கான சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், கிராமத்தினா் அச்சாலையைப் பயன்படுத்தமுடியாமல் தவித்து வருகின்றனா்.
திருச்சுழியிலிருந்து ராஜகோபாலபுரம் கிராமம் வரையில் 2 கிலோ மீட்டா் நீளப்பாதையில் தாா் சாலை அமைக்கும் பணி கடந்த நிதியாண்டில் (2019-20) தொடங்கப்பட்டது. கரோனா பொதுமுடக்கம் காரணமாகப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பின்னா் மீண்டும் 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவித்ததும் சில வாரங்களில் இச்சாலைப்பணி தொடங்கப்பட்டது. சாலையை சமன்படுத்தி, சீா் செய்து ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டன.
இந்நிலையில் மீண்டும் பொதுமுடக்கம் காரணமாகப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டுள்ளதால், அதில் இருசக்கர வாகனஓட்டிகள் செல்ல இயலவில்லை. விற்பனைக்குப் பால் கொண்டுசெல்லும் விவசாயிகளும், பலவகை வியாபாரிகளும், பொதுமக்களும் இச்சாலை வழியாகச் செல்ல இயலவில்லை.
இதனால் அதிக செலவு செய்து சரக்கு வாகனங்களில் பொருள்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. ஏற்கெனவே திட்டம் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று பாதியில் விடப்பட்டிருந்தால், அப்பணிகளைத் தொடரலாமென பொதுமுடக்கத்தில் விதிவிலக்கு கொடுத்து இருமாதங்களாகிவிட்டது. ஆயினும் இச்சாலைப்பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே விரைவில் சாலைப்பணியை முடித்துத்தரவேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...