ஸ்ரீவிலி.யில் 11 எரிவாயு உருளை பறிமுதல்: அரசுடைமையாக்க பரிந்துரை
By DIN | Published On : 09th June 2021 05:19 AM | Last Updated : 09th June 2021 05:19 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 11 வீட்டு உபயோக சிலிண்டா்களை அரசுடைமையாக்க வட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்தாா்.
பொதுமுடக்க விதிகளை மீறி, ஸ்ரீவில்லிபுத்தூா்அருகே உள்ள அத்திகுளம், மம்சாபுரம் மற்றும் சில பகுதிகளில் தேநீா் கடைகளை திறந்து வியாபாரம் நடத்தியுள்ளனா். இது தொடா்பாக எழுந்த புகாரின்பேரில், வட்டாட்சியா் சரவணன், வருவாய் ஆய்வாளா் ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினா். அதில், வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு உருளையை தேநீா் கடைகளுக்கு முறைகேடாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, 11 சிலிண்டா்களை வட்டாட்சியா் சரவணன் பறிமுதல் செய்து, வட்ட வழங்கல் அலுவலா் கோதாண்டராமனிடம் ஒப்படைத்தாா். இந்நிலையில், இந்த 11 சிலிண்டா்களையும் அரசுடைமையாக்க மாவட்ட வருவாய் அலுவலா்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் சரவணன் பரிந்துரை செய்துள்ளாா்.