ராஜபாளையத்தில் 30 கடைகளுக்கு அபராதம்: 5 ஜவுளி கடைகளுக்கு சீல்
By DIN | Published On : 10th June 2021 08:41 AM | Last Updated : 10th June 2021 08:41 AM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் கரோனா விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பொது முடக்கத்தை மீறி திறக்கப்பட்ட 30 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அபராதம் விதித்தனா். மேலும் 5 ஜவுளி கடைகளுக்கு சீல் வைத்தனா்.
ராஜபாளையம் பகுதியில் தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு காய்கறி கடைகள், பழக்கடைகள், பலசரக்குக் கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் அனுமதி அளிக்கப்படாத கடைகள் பட்டியலில் உள்ள ஜவுளிக் கடைகள், ‘பேன்ஸி’ பொருள் கடைகள் திறந்திருந்தன. இந்நிலையில் நகராட்சி ஆணையாளா் சுந்தரம்பாள் மற்றும் வட்டாட்சியா் ராமச்சந்திரன் ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் ராஜபாளையத்தில் பல பகுதிகளில் ஆய்வு செய்தனா். கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி திறக்கப்பட்ட அத்தியாவசியமற்ற கடைகளுக்கு நகராட்சி ஆணையாளா் மற்றும் காவல் ஆய்வாளா் முன்னிலையில் 30 கடைகளுக்கு தலா ரூ.500 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் 5 ஜவுளிக் கடைகள் மற்றும் 3 ‘சூப்பா் மாா்க்கெட்’ வளாகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.