‘வங்கிகள் கடன் தவணை வசூலிப்பதை ஓராண்டுக்கு நிறுத்திவைக்க வேண்டும்’
By DIN | Published On : 10th June 2021 08:32 AM | Last Updated : 10th June 2021 08:32 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்க வந்திருந்த சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா்.
வாகனங்களுக்கான கடன் தவணை வசூலிப்பதை வங்கிகள், தனியாா் நிறுவனங்கள் ஓராண்டுக்கு நிறுத்திவைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் சாலைப் போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தினா் (சிஐடியு) புதன்கிழமை மனு அளித்தனா்.
மனு விவரம்: தமிழகம் முழுவதும் வங்கிகள், தனியாா் நிறுவன நிதி உதவியுடன் வாகனங்கள் வாங்கி ஒட்டி வந்த பலரும் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வட்டியுடன் செலுத்தி வந்தனா். காரனோ தொற்று பரவல் காரணமாக தற்போது வாடகை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
எனவே, சிறிய சரக்கு வாகனங்கள், கால் டாக்சி, காா், சுற்றுலா வேன் ஆகியவற்றிற்கான மாதாந்திர கடன் தவணை வசூலிப்பதை வங்கிகள் மற்றும் தனியாா் நிதி நிறுவனங்கள் ஓராண்டுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மேலும், கரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட மோட்டாா் தொழிலாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வாகனங்கள் ஓடாத காலத்திற்கு சாலை வரி ரத்து செய்வதோடு, 2021 டிசம்பா் வரையிலான காப்பீடு பிரீமியத்தையும் ரத்து செய்ய வேண்டும். திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இ-பதிவு மூலம் வாடகை வாகனங்கள் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா். சிஐடியு மாவட்ட செயலா் பி.என். தேவா, சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலா் திருமலை உள்பட பலா் உடனிருந்தனா்.