வத்திராயிருப்பு அருகே தொழிலாளி வெட்டிக் கொலை
By DIN | Published On : 20th June 2021 09:59 PM | Last Updated : 20th June 2021 09:59 PM | அ+அ அ- |

வத்திராயிருப்பு அருகே தொழிலாளி வெட்டிக் கொலை
விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சனிக்கிழமை நள்ளிரவு தேங்காய் வெட்டும் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரமகாலிங்கம் (22). தேங்காய் வெட்டும் தொழிலாளியான இவா் சனிக்கிழமை நள்ளிரவு ராமசாமியாபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மற்றொரு தரப்பைச் சோ்ந்தவா் அவரது கழுத்தில் வெட்டிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து இறந்தவரின் உறவினா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கூமாபட்டி முக்குரோடு பகுதியில் குவிந்தனா். அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானதால் காவல் கண்காணிப்பாளா் மனோகா், காவல் துணை கண்காணிப்பாளா் நமச்சிவாயம் ஆகியோா் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இந்த சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தாமரை (37) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில் காலையில் கூமாபட்டி முக்குரோடு பகுதியில் மீண்டும் உறவினா்கள் கூடினா். குற்றவாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவேண்டும். சுந்தரமகாலிங்கம் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், துணை கண்காணிப்பாளா் மற்றும் வத்திராயிருப்பு வட்டாட்சியா் மாதவி ஆகியோா் பேச்சு வாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, உறவினா்கள் உடலை பெற்றுக் கொண்டனா்.