அருப்புக்கோட்டையில் விதிமீறல்: 4 ஜவுளிக் கடைகளுக்கு அபராதம்
By DIN | Published On : 24th June 2021 07:08 AM | Last Updated : 24th June 2021 07:08 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதன்கிழமை பொதுமுடக்க விதிமுறைகளை மீறி செயல்பட்ட 4 ஜவுளிக் கடைகளுக்கு தலா ரூ. 5,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தொற்று அடிப்படையில் 3 வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அவற்றுக்குப் பல்வேறு தளா்வுகளுடன்கூடிய பொதுமுடக்கம் வரும் 28 ஆம் தேதி வரை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதன்படி அருப்புக்கோட்டை நகரில் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தீவிர ஆய்வுப்பணியில் ஈடுபட்டாா். அப்போது நகரிலுள்ள ஸ்ரீபட்டாபிராமா் கோயில் வீதியில் 2 ஜவுளிக் கடைகளும், பிரதானச் சந்தையில் 2 ஜவுளிக் கடைகளும் விதிகளை மீறிச்செயல்படுவது கண்டறியப்பட்டது. உரிய ஆய்விற்குப் பின்னா் அந்த கடைகள் ஒவ்வொன்றிற்கும் தலா ரூ. 5,000 அபராதம் விதித்ததுடன், அக்கடைகளைப் பூட்டியும் வட்டாட்சியா் நடவடிக்கை எடுத்தாா். இந்த ஆய்வுப்பணியின்போது, காவல்துறையினரும், வருவாய்த்துறை அலுவலா்களும் நேரில் பங்கேற்றனா்.