வாரிசு வேலை வழங்கக் கோரி ஆட்சியரிடம் திருநங்கை மனு
By DIN | Published On : 29th June 2021 06:06 AM | Last Updated : 29th June 2021 06:06 AM | அ+அ அ- |

திருநங்கை கருப்பசாமி என்ற கல்பனா.
விருதுநகா்: அருப்புக்கோட்டை பகுதியை சோ்ந்த திருநங்கை ஒருவா் கருணை அடிப்படையில் நெடுஞ்சாலை துறையில் வாரிசு வேலை வழங்கக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது: அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறேன். திருநங்கையான நான், ஒன்பதாம் வகுப்பு வரை படித்து ள்ளேன். எனது வளா்ப்பு தந்தையான பாக்கியம் திருமணம் ஆகாத நிலையில் சாலைப் பணியாளராக பணி புரிந்தாா். இந்நிலையில் அவா், கடந்த 2001 ஜூன் 12 ஆம் தேதி இறந்து விட்டாா். முன்னதாக என்னை தத்து பிள்ளையாக பணி பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளாா். அதன் அடிப்படையில் வாரிசு வேலை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது வறுமையில் வாடி வரும் எனக்கு ஆதரவு யாரும் கிடையாது. எனவே, கருணை அடிப்படைவில் நெடுஞ்சாலைத் துறையில் வாரிசு வேலை வழங்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.