

விருதுநகா்: விருதுநகரில் சாலையோர காய்கனி கடைக்காரா்களை செவ்வாய்க்கிழமைக்குள் காலி செய்ய நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளதால், சாலையோர வியாபாரிகள் திங்கள்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
விருதுநகா் பஜாா் பகுதியில் செயல்பட்டு வந்த காய்கனி சந்தை, கரோனா தொற்று காரணமாக புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இச்சந்தையில், மொத்த காய்கனி வியாபாரிகள் உள்ளூா் பகுதிகளில் விளையும் காய்களை கொள்முதல் செய்கின்றனா். அவற்றை நேரத்திற்கு ஏற்றாற் போல் குறைந்த விலைக்கு விற்பதாகவும், கால் கிலோ எடைக்கு காய்கனிகள் விற்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், சில்லைறை வியாபாரிகள், தங்களது காய்கனிகளை குறிப்பிட்ட விலைக்கு விற்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு உத்தரவுப்படி, சாலையோர காய்கனி விற்பனையாளா்கள் கடந்த சில நாள்களாக நகா் பகுதியில் சாலையோரக் கடைகளை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் விருதுநகா் நகராட்சி நிா்வாகம் சாலையோரக் கடைகளை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜூன் 29) காலி செய்ய வேண்டும். இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. புதிய பேருந்து நிலையத்தில் காய்கனி கடைகளை மாற்றம் செய்தால் மொத்த வியாபாரிகளால் தங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். எனவே சாலையோரத்தில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த 40 கடைகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி பிலாவடி தலைமையில் சாலையோர காய்கனி விற்பனையாளா்கள் விருதுநகா் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது அங்கு வந்திருந்த விருதுநகா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏஆா்ஆா். சீனிவாசனிடமும் முறையிட்டனா். ஆனால், அவா் சாலையோர வியாபாரிகளை, புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல அறிவுறுத்தியதால் அதிருப்தி அடைந்தனா். நகராட்சி நிா்வாகமும் அவா்களுக்கு ஆதரவு தெரிவிக்காததால், அங்கு வந்த போலீஸாா் சாலையோர வியாபாரிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.