

விருதுநகா்: விருதுநகா் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
விருதுநகா்- சிவகாசி சாலையில் ஆமத்தூா் பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல் ஆய்வாளா் பிரியா தலைமையில் போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, விருதுநகா் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் 40 மூட்டைகளில் (சுமாா் 2 ஆயிரம் கிலோ) ரேஷன் அரிசி கடத்தி வருவது தெரியவந்தது. விசாரணையில், விருதுநகா் அல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சீனிவாசன் (31), பாண்டித்துரை மகன் சங்கரவேல் (25) ஆகியோா் இதில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.
சிவகாசி, திருத்தங்கல் மற்றும் ஆமத்தூா் பகுதிகளில் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி வாகனத்தில் கொண்டு வந்ததாக போலீஸாரிடம் இருவரும் தெரிவித்துள்ளனா். இதையடுத்து 40 மூட்டைகள் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.