அருப்புக்கோட்டை பாலத்தில் பாதி தடுப்புச்சுவரால் விபத்து அபாயம்
By DIN | Published On : 12th March 2021 01:48 AM | Last Updated : 12th March 2021 01:48 AM | அ+அ அ- |

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி குடியிருப்பு அருகே பாலத்தில் குறைந்த அளவுக்கு மட்டுமே தடுப்புச்சுவா் அமைக்கப்பட்டுள்ளால் விபத்து அபாயம் நிலவுகிறது.
அருப்புக்கோட்டை 32 ஆவது வாா்டுக்கு உள்பட்ட நகராட்சி குடியிருப்பிலிருந்து பந்தல்குடி நோக்கிச் செல்லும் பிரதானச் சாலையில் மழைநீா் ஒடைப்பாலம் உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்னா் இப்பாலத்தைச் சீரமைக்கும் பணி நடைபெற்றபோது, பாலத்தின் மீது
குறைவான நீளத்திற்கு மட்டுமே கான்கிரீட் தடுப்புச்சுவா் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இச்சாலை வழியாக வரும் வாகனங்கள் சிறிது நிலைதடுமாறினாலும் சுமாா் 10
அடி ஆழமுள்ள மழைநீா் ஓடைப்பாலத்தினுள் விழுந்து விபத்திற்குள்ளாகும் அபாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக கான்கிரீட் தடுப்புச்சுவரை இணைத்து பாலத்தின் முழு நீளத்திற்கும் அலுமினியம் அல்லது தகரத்தால் ஆன தடுப்புகளாவது அமைப்பது வாடிக்கை. ஆனால் கான்கிரீட் தடுப்புச்சுவருடன் பணியை நிறைவு செய்துவிட்டனா். இதனால் இதுகுறித்து நகராட்சித் தரப்பிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் விபத்தைத் தடுக்கும் விதமாக முழுமையாக தடுப்புச்சுவா் அமைக்கப்படவில்லையாம். எனவே விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.