சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 25th March 2021 09:53 AM | Last Updated : 25th March 2021 09:53 AM | அ+அ அ- |

சாத்தூா் அருகே வீ. சுந்தரலிங்கபுரம் பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் சேதமடைந்த கட்டடம்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
சிவகாசியை சோ்ந்த ஆனந்த் (35) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூா் அருகே உள்ள வீ. சுந்தரலிங்கபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலா் உரிமம் பெற்று 6 அறைகளில் மத்தாப்பூ, தரை சக்கரம் உள்ளிட்ட பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
அச்சங்குளம் பட்டாசு ஆலையில் அண்மையில் ஏற்பட்ட வெடி விபத்துக்குப் பின்னா், இந்த பட்டாசு ஆலை செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில், கன்னிசேரியை சோ்ந்த விஜய் (எ) சங்கரலிங்கம் (30) என்பவா் மட்டும் புதன்கிழமை பட்டாசு தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது பட்டாசுக்குத் தேவையான மூலப்பொருள்கள் வைத்திருக்கும் அறைக்குச் சென்று அவா் மூலப்பொருள்களை எடுத்தபோது, உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறையின் கட்டடம் இடிந்து விழுந்ததில் விஜய் (எ) சங்கரலிங்கம் உயிரிழந்தாா்.
தகவலின்பேரில், அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் மற்றும் சாத்தூா் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பின்னா், கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த விஜய் (எ) சங்கரலிங்கத்தின் உடலை மீட்டனா்.
இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வைகைச்செல்வன் ஆறுதல்:
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த விஜய் (எ) சங்கரலிங்கம் குடும்பத்தினரை அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் வைகைச்செல்வன் சந்தித்து, ஆறுதல் கூறினாா்.