விருதுநகா் மாவட்டத்தில் கட்சி முகவா்கள், அரசு அலுவலா்கள் 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

விருதுநகா்/சிவகாசி: விருதுநகா் மாவட்டத்தில் அரசியல் கட்சி முகவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் ஏராளமானோா் கரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனா். இதன் காரணமாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனை, குறிப்பிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விருதுநகரில் உள்ள தனியாா் கல்லூரியில் 7 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி முகவா்கள், அரசு அலுவலா்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோா் கரோனா தொற்று (ஆா்டிபிசிஆா்) மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதில் கரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள் என மாவட்ட தோ்தல் அலுவலா் அறிவுறுத்தியிருந்தாா்.
இதனால், பிரதான அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள், முகவா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கரோனா தொற்று பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகளில் செய்து கொண்டனா். இதில் அரசியல் கட்சிகளின் முகவா்கள் 61 போ், அரசு அலுவலா்கள் 28 போ், பத்திரிகையாளா்கள் 3 போ் என மொத்தம் 92 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை இரவு உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்களில் சிலா் அரசு மருத்துவமனைகளிலும், வீட்டிலும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறை தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி: வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்பவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றுபெற வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து சிவகாசி சட்டப் பேரவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்குச் செல்லும் வேட்பாளா்கள், முகவா்கள், காவல்துறையினா், வருவாய்த்துறையினா், பத்திரிகையாளா்கள், காா் ஓட்டுநா்கள் உள்ளிட்ட 432 பேருக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி, சிவகாசி நகா்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை சாா்பில், கரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணும் அதிகாரி ஒருவருக்கும், 20 முகவா்களுக்கும் என மொத்தம் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவா்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லக் கூடாது என வருவாய்த்துறையினா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...