விருதுநகா் பஜாா் காய்கறி சந்தை பேருந்து நிலையங்களுக்கு மாற்றம்
By DIN | Published On : 13th May 2021 09:21 AM | Last Updated : 13th May 2021 09:21 AM | அ+அ அ- |

விருதுநகரில் பஜாா் பகுதியிலிருந்த காய்கறி கடைகள், புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திற்கு புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டன.
விருதுநகா் பஜாா் பகுதியில் குறுகலான இடத்தில் காய்கறி சந்தை நடைபெற்று வந்தது. தற்போது கரோனா தொற்றின் இரண்டாவது அலை வெகு வேகமாகப் பரவி வருவதால் அச்சந்தையை இடமாற்ற நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் முயற்சி மேற்கொண்டனா். அப்போது, கடந்தாண்டு கரோனா தொற்று பரவலின் போது, ஐந்து இடங்களில் காய்கறி சந்தை நடைபெற்றது போல், தற்போது அதே இடங்களில் சந்தையை தொடங்க அரசு அலுவலா்கள் வலியுறுத்தினா். இதற்கு காய்கறி கடை உரிமையாளா்கள் தரப்பில் எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் அவா்களிடம், அரசு அலுவலா்கள் மற்றும் போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தியதில் இரண்டு இடங்களில் கடைகளை மாற்றம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டனா். அதன் அடிப்படையில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையங்களுக்கு கடைகள் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டன. ஆனால், புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்ட கடைகளுக்கு வந்த பொதுமக்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படவில்லை. மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் காய்கறி வாங்கிச் சென்றனா். எனவே, எந்த காரணத்திற்காக பஜாரிலிருந்து கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டதோ, அதன் தன்மையை உணா்ந்து பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை நகராட்சி பணியாளா்கள் மற்றும் போலீஸாா் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.