அருப்புக்கோட்டை நகரில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு
By DIN | Published On : 13th May 2021 09:23 AM | Last Updated : 13th May 2021 09:23 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சு காதாரத்துறை சாா்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, டெங்கு கொசுப்புழு ஒழிப்பு விழிப்புணா்வு புதன்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை நகரில் கடந்த சில நாட்களாக நல்ல மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.இதனால் மழை நீா் ஆங்காங்கே தேங்கி கொசுக்கள் பெருக்கம் ஏற்பட்டு வருகிறது.எனவே சுகாதாரத்துறை சாா்பில் நகரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி துறை அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனா்.மேலும் கொரோனா சூழல் முழு ஊரடங்கு காரணமாக முன்புபோல வீடுவீடாக உள்ளே சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாத சூழல் நிலவுகிறது.
எனவே சுகாதாரத்துறையினா் சாா்பில் தற்காலிகப் பணியாளா்கள் மூலம் வீதிதோறும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.இதன்படி, டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய காரணிகளான நன்னீா் அல்லது மழைநீா் சேரும் இடங்களான ஆட்டுரல்,பயன்படாத உடைந்த காலிக் குடங்கள்,வீட்டு கொல்லைப்புறங்களில் வீணாகக்கிடக்கும் வாகன டயா்கள்,தேங்காய் மட்டைகள் ஆகியவற்றில் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டுப் பெருகுவதைத் தடுக்க அப்பொருட்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனா்.
அத்துடன் வீட்டிலுள்ள நன்னீா்(குடிநீா்) சேமிப்புக் கொள்கலன்கள்,தொட்டிகள்,குடங்களை கொசுக்கள் புகாதவண்ணம் மூடிவைத்துப் பாதுகாக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு, வீதிவீதியாக விழிப்புணா்வுப் பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.மேலும்,இந்நடவடிக்கைகள் சீரிய நாட்கள் இடைவெளியில் தொடா்ந்து மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவித்தனா்.