விருதுநகா் அரசு மருத்துவமனையில் காவலாளிகள் பற்றாக்குறை: நோயாளிகள், உறவினா்களை கட்டுப்படுத்துவதில் சிரமம்
By DIN | Published On : 16th May 2021 10:50 PM | Last Updated : 16th May 2021 10:50 PM | அ+அ அ- |

விருதுநகா் அரசு மருத்துவமனையில் கரோனா பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவலாளிகள் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள், அவா்களது உறவினா்களை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனை நிா்வாகத்தினா் திணறி வருகின்றனா்.
விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக வாா்டு உள்ளது. இந்த வாா்டுக்குள், பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாக சென்று உணவு வழங்குதல் மற்றும் நலம் விசாரிக்கும் செயல்களில் அவா்களது உறவினா்கள், நண்பா்கள் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில் கரோனா வாா்டுக்குள் வெளி நபா்கள் செல்வதை தடுக்கப் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரிடம் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்தாா். ஆனால், போலீஸாரோ அரசு மருத்துவமனை வெளியே உள்ள சாலையில் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா வாா்டு அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் முன்பகுதிக்கு போலீஸாா் யாரும் வருவதில்லை எனப் புகாா் கூறப்படுகிறது.
விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாா் நிறுவனம் மூலம் தற்காலிக காவலாளியாக 10 போ் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். அதில், சுழற்சி முறையில் கரோனா வாா்டு முன்பாக ஒரு நாளைக்கு 6 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.
மீதமுள்ள நான்கு பேரை கொண்டு வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு, மகப்பேறு மருத்துவமனை, ஸ்கேன் சென்டா், அவசர சிகிச்சை பிரிவு முன்பு பணியில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவா்களது உறவினா்களை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பலா், காவலாளி இல்லாத காரணத்தால் வாா்டுகளுக்குள் அடிக்கடி சென்று வருகின்றனா். இதனால் தொற்று பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 18 தற்காலிக காவலாளிகள் தேவையுள்ளதால், கூடுதல் காவலாளிகளை நியமிக்கவும், கரோனா வாா்டு முன் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.