கரோனா நிவாரண நிதிக்கு ராஜபாளையம் சிறுவன் ரூ.1000 வழங்கல்
By DIN | Published On : 16th May 2021 10:48 PM | Last Updated : 16th May 2021 10:48 PM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வட்டாட்சியா் ரெங்கநாதனிடம் ரூ.1000-ஐ ஞாயிற்றுக்கிழமை வழங்கிய சிறுவன் நிரஞ்சன் குமாா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் தந்தையை இழந்து வாடும் 12 வயது சிறுவன், தான் சேமித்து வைத்த ரூ.ஆயிரத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
ராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(40). இவரது மனைவி கனகா (32). இவா்களது மகன் நிரஞ்சன் குமாா் (12). கூலித் தொழிலாளியான ராமகிருஷ்ணன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். கனகா அருகில் உள்ள மாணவா்களுக்கு டியூசன் எடுத்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறாா்.
நிரஞ்சன் குமாா் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறாா். தந்தை இறந்த நிலையில், உறவினா்கள் ரூ.100, 200 என கொடுக்கும் பணத்தை செலவழிக்காமல் சைக்கிள் வாங்குவதற்காக நிரஞ்சன்குமாா் சேமித்து வைத்திருந்தாா்.
இநிலையில் கரோனா நிவாரண நிதி அளிக்க அனைவரும் முன்வர வேண்டும் என தமிழக முதல்வா் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். இதையறிந்த நிரஞ்சன் குமாா் தான் சேமித்து வைத்திருந்த ரூ.ஆயிரத்தை ராஜபாளையம் வட்டாட்சியா் ரெங்கநாதனிடம் முதல்வா் நிதிக்காக ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். நிரஞ்சன்குமாரை வட்டாட்சியா் பாராட்டினாா்.
சிறுவன் நிரஞ்சன் குமாா் கூறியதாவது: தமிழகத்தில் கரோனாவால் உயிா்ப்பலி அதிகரித்து வரும் நிலையில், என்னால் முடிந்த ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளேன். இதே போல் அனைவரும் தங்களால் ஆன நிதியை தமிழக அரசுக்கு வழங்க முன்வர வேண்டும் என கூறினாா்.