தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருள்களை கேரள அரசு, தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும் என அம்மாநில முதல்வா் பினராயி விஜயனுக்கு, விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து அவா் எழுதிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு இருந்து வரும் நிலையில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் 50 சதவீத ஊழியா்களுடன் பணி புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா், சிவாசி, சாத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கான மூலப்பொருள்கள் கேரளத்திலிருந்து வாங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கேரளத்தில் கரோனா தொற்றுப் பரவலை காரணம் காட்டி தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் உற்பத்தி செய்வதற்கும், ஏற்கெனவே கையிருப்பு உள்ள மூலப்பொருள்களை விற்பனை செய்வதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாள்களுக்கு மேல் தீப்பெட்டி உற்பத்தி செய்ய முடியாத சூழல் உள்ளது.
எனவே தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருள் தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் கேரள அரசு விதித்த தடையை நீக்க வேண்டும். இதன் மூலம் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த லட்சக்கணக்கான தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு பெற முடியும் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.