ஸ்ரீவிலி. ஆண்டாள் சூடிய பிரம்மாண்ட மாலை திருப்பதி புறப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பிரம்மாண்டமான மாலை சனிக்கிழமை திருப்பதி புறப்பட்டது.
திருப்பதிக்கு புறப்பட்ட மாலை, பட்டு வஸ்திரம், கிளி.
திருப்பதிக்கு புறப்பட்ட மாலை, பட்டு வஸ்திரம், கிளி.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பிரம்மாண்டமான மாலை சனிக்கிழமை திருப்பதி புறப்பட்டது. இதற்காக ஆண்டாள் கோவிலில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெறும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாளுக்கு பிரம்மாண்டமான மாலை அணிவிக்கப்பட்டு அந்த மாலை திருப்பதியில் ஏழுமலையான் சீனிவாசப்பெருமாள் அணிந்துகொள்ள கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்குரிய விழா சனிக்கிழமை கோவில் வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. 

இதற்காக ஆண்டாளுக்கு பிரம்மாண்டமான மாலை தயார் செய்யப்பட்டு அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து ஆண்டாள் சூடிய மாலை மற்றும் பட்டு வஸ்திரம் கிளி ஆகியவை பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட கூடை ஒன்றில் கொண்டு செல்லப்பட்டது. வெள்ளி மற்றும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு கோவிலில் வழிபட அனுமதி இல்லாததால் அர்ச்சகர்களும், ஆண்டாள் கோவில் நிர்வாகிகள் மட்டும் இந்த மாலை கொண்டுசெல்லும் வைபவ நிகழ்ச்சியில்  கலந்து கொண்டனர். 

ஆண்டாள் மாலை கோவிலில் இருந்து மாடவீதி வழியாக மேளம் தாளம் முழங்க கொண்டு செல்லப்பட்டு பின்னர் புறப்பட்டது. இந்த விழாவில், கோவில் தக்கார் ரவிச்சந்திரன் இணை ஆணையர் குமரதுரை செயல் அலுவலர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும் மாலை திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் திருநாளில் திருப்பதி ஏழுமலையானுக்கு அணவிக்கப்படும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com